செவ்வாய், 28 மே, 2013

நாயிசம்


காலை நேரம். இருளை முற்றுமுழுதாக விரட்டியோட்டும் முயற்சியில் களைத்த கையாலாகாத்தனத்துடன் ஏதோ பகல்பொழுதுதான் எனக் காட்ட விளைந்துகொண்டிருந்தது வெளிச்சம்.

பாடசாலைகளை நாடியோடும் பட்டாளங்கள், வேலைக் களங்களை நோக்கி விரையும் கூட்டங்களென அந்த வீதி பரபரப்பாக இரைந்துகொண்டிருந்தது.

வஸ்ஸை எதிர்பார்த்து அங்கே நிற்கிறேன். வழமையாக வேலைக்குச் செல்வதற்காக அந்தநேரத்தில் அந்த இடத்தில் நின்று வஸ் வரும்வரையில் பரபரப்பான சூழலை அவதானிப்பது வழக்கம். பரபரப்பான சூழல் என்று ஒரே வார்த்தையில் கூறினாலும் தினமும் புதுப்புதுப் பரபரப்புகள் அங்கே நிகழ்வுகளாக விரிந்துகொண்டிருக்கும்.

வஸ் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கின்றன. என்னுடன் வழமையாகப் பயணம் செய்பவர்களும் சிறு அறிமுகப் புன்னகையைச் சிந்தியவாறு அந்த வஸ் நிலைத்துக்கு வருகிறார்கள்.

எனது வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஜேர்மன் பாட்டி ஒருவரும் அங்கு வருகிறார்.

அன்பான பாட்டி அவர். அடிக்கடி வலிய வந்து உரையாடுவார். தன்னை மாதத்தில் ஒருமுறை பார்க்கவரும் மூத்த மகளைப்பற்றி, கிழமைக்கு ஒருதடவை வரும் மகனைப்பற்றி, தனது தனிமைச் சுமையைப்பற்றி எல்லாம் உரையாடுவார். என்னைப்பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்.

'நீ நாட்டுப் பிரச்சினைகளால் சொந்தங்களைப் பிரிந்து இங்கே வாழ்கிறாய். ஆனால் நான்... இந்த நாட்டுப் பழக்க வழக்கங்களால் என் சொந்தங்களைப் பிரிந்து வாழ்கிறேன்...'

எங்களுக்கிடையே உள்ள அந்த ஒற்றுமையைக் கூறி வருத்தப்படுவார்.

''வேலைக்கோ..."

''ஓம்...''

''உனக்கு விடுமுறையே இல்லையா... எப்போது பார்த்தாலும் இந்தநேரத்தில் இங்கே நிற்கிறாய்..."

அக்கறையோடு கேட்டார்.

''ஒருநாள் விடுமுறை... புதன்கிழமை..."

''எங்களுக்கு இது சரிவராது. வேலை செய்வது சந்தோசமாக வாழ... உனக்கு ஒருநாள்தானே விடுமுறை கிடைக்கிறது. அதிலும் நித்திரை போக ஒரு சில மணித்தியாலங்கள்தானே உன்னால் சந்தோசமாக வாழ முடியும்... என்ன வாழ்க்கை இது..."

அலுத்துக்கொண்டார்.

அக்கறையோடு அனுதாபப்படுவதை உணர முடிந்தது.

ஆனால் எனது குறுகிய வருமானத்தை, அதனூடாக அதிகரித்துக்கொண்டே செல்லும் தேவைகளை எல்லாம் அவரிடம் கூறமுடியுமா? கூறினாலும் அவரால் விளங்கிக் கொள்ள இயலுமா?

'வீண் சுமைகளை ஏன் உன்மீது திணித்துக் கொள்கிறாய்?' என்று கேட்டாலும் கேட்பார்.

மௌனித்தேன்.

வஸ் வந்தது. இருபத்தாறாம் இலக்க வஸ்.

நான் அவசரமாக உள்ளே ஏறி யன்னல் கரையாகப் பார்த்து அமர்ந்துகொண்டேன். யன்னல் பக்கமாக உள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதில் எனக்கு அலாதி விருப்பம். கடந்த ஒரு வருடமாக இந்த வஸ்ஸில் இதே நேரத்தில் பிரயாணம் செய்தாலும், யன்னல் பக்கத்து இருக்கையின் மேலுள்ள எனது அவா என்னைவிட்டுப் போனபாடாக இல்லை. யன்னல் பக்கமாக இருக்கை கிடைக்காதுபோனால் எதையோ இழந்த தவிப்பு என்னுள் கிளம்பி மனதை மெதுவாகக் கிள்ளும்.

அந்தப் பாட்டி வஸ்ஸினுள் ஏறி எனக்கு இரண்டு இருக்கைகள் முன்னே அமர்ந்தார்.

பஸ் போய்க்கொண்டிருந்தது. யன்னல் வழியாக வெளியே தென்படும் காட்சிகளை இரசிக்க ஆரம்பித்தேன்.

பின்னால் நான்கைந்து இளைஞர்கள் அட்டகாசமாக தமக்குள் சத்தமிட்டவாறு இருக்கைகளில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள். 'யக்கற்'றைப் பிடித்து இழுத்தார்கள். ஒருவரை ஒருவர் மெதுவாக அடிப்பதும், அமத்துவதும், திமிறுவதும், இழுத்து விழுத்தி இருக்கைகளைக் குலுக்குவதுமாக தமது வயதுக்கேற்ற குறும்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் துருக்கி நாட்டவர்களாக அல்லது குர்திஷ் இனத்தவர்களாக இருக்கவேண்டும்.

பல ஜேர்மன் மக்கள் நீல நிறக் கண்களை உருட்டி முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.

வஸ் ஒரு தரிப்பிடத்தில் நிற்கிறது. சிலர் முண்டியடித்துக் கொண்டு ஏறுகிறார்கள். சிலர் இறங்குகிறார்கள். எனக்கு அருகிலுள்ள இருக்கை காலியாக இருக்கிறது. சிலர் அதைப் பார்ப்பதும் என்னைப் பார்ப்பதுமாக அதில் அமர மனமற்றவர்களாக என்னைத் தாண்டிச் சென்று கம்பியைப் பற்றியவாறு நிற்கிறார்கள். ஒரு அல்பானியக் குடும்பம் நான்கு பிள்ளைகளுடன் சனத்தை விலக்கியவாறு உள்ளே ஏறுகிறது. 'கின்டர் வாகன்' எனப்படும் குழந்தைகளுக்கான வண்டிலில் இருந்த பிள்ளை வீறிட்டு கத்திக்கொண்டிருந்தது. தாய் அதனைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போனவளாய், அதன் தொடையில் கிள்ளினாள்.

குழந்தை கத்தலை மறந்து அலற ஆரம்பித்தது.

ஏனைய மூன்று பிள்ளைகளும் தங்களுக்குள் கத்திச் சிரித்தவாறு வஸ்ஸினுள் அங்கும் இங்குமாகப் பயணிகளை உரசியவாறு ஓடியாடி அந்த வஸ்ஸை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டிருந்தார்கள். தகப்பன் அவர்களை ஓரிடத்தில் ஒன்றாக நிறுத்த எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

வஸ் ஓரிடத்தில் திடீரென 'பிரேக்' பிடித்து குலுக்கலுடன் தழும்ப, அந்த மூன்று பிள்ளைகளில் ஒன்று நிலைதடுமாறி ஜேர்மன் கிழவரின்மீது சரிந்து விழுந்தது.

''ஏய்..." என்று கோபத்துடன் சத்தமிட்டார் அந்த முதியவர்.

''சனியன், சனியன்... எனது உடுப்பை அழுக்காக்கிவிட்டது... வஸ்ஸினுள் சுதந்திரமாக பயணம்செய்ய முடியவில்லை."

அவரது கோபம் குறைந்தபாடாக இல்லை.

அந்தக் குழந்தைகளின் தந்தையின் முகம் முதியவரின் சொற்களைக் கேட்டு வாடிவிட்டது. 'சனியன்' என்று குழந்தையைத் திட்டினால் பெற்றோருக்குக் கஸ்டமாகத்தானே இருக்கும்?! அந்த முதியவருக்கு இது தெரியாதா அல்லது தெரிந்தும் வெளிநாட்டவன்தானே என்ற எண்ணமா?

எனக்குப் புரியவில்லை.

வஸ் ஒவ்வொரு தரிப்பிடமாக நின்று நிதானித்து செல்கிறது. அந்த மூன்று குழந்தைகளின் கும்மாளம் இன்னும் ஓய்ந்தவாறாக இல்லை. அதேநேரம் பின் இருக்கைகளில் உள்ள இளைஞர்களின் அட்டகாசங்களும் தீர்ந்தவாறாக இல்லை.

பல ஜேர்மன்காரர்களின் முகங்களில் கோபம் கொளுந்துவிட்டு எரிந்தது. வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதை சிவந்துபோன முகங்கள் பல அப்பட்டமாகவே பிரதிபலித்தன.

பஸ் 'பப்பிள் ஸ்ராச' எனும் பஸ் தரிப்பிடத்தை அடைந்தபோது, வஸ்ஸினுள் ஆசனங்கள் நிறைந்து பலர் இருப்பதற்கு இடமின்றி கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

வெகுநேரமாக என்னருகே வெறுமையாக இருந்த இடத்தில் ஒரு ஆபிரிக்கப்பெண் வந்து குந்திக்கொண்டாள்.

'ஹலோ...' என்றொரு அறிமுகப் புன்னகையைச் சிந்தியவள்,
''நீ ஸ்ரீலங்காவா..." என்று கேட்டாள்.

''ஓம்..."

''நல்ல அழகாக இருக்கிறாய்..." என்றபோது சற்றுக் கூச்சமாக இருந்தது.

அப்போது இரு கைகளிலும் சாமான்கள் நிரம்பிய இரண்டு பைகளைத் தூக்கியவாறு  ஒரு துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருத்தி உள்ளே வந்தாள். அந்த சுமையான பைகள் சிலரது கால்களை உரசி நோவேற்ற, அவள் கம்பியொன்றில் தனது பருமனான முதுகைச் சாய்க்க முயற்சித்தவாறு தடுமாறிக் கொண்டிருந்தாள். பஸ் குலுங்கியபோது சமநிலை இழந்தவளாய் அருகிலுள்ளவர்களின்மீது விழாத குறையாக இடித்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி இடி வாங்குபவர்களிடம் அவள் மன்னிப்புக் கேட்டவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டாலும், அவர்கள் அவளை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதுபோல் சிவப்பேறிய முகங்களை அப்பால் திருப்பிக் கொண்டார்கள்.

பஸ் மீண்டும் ஓரிடத்தில் 'பிரேக்' பிடித்துக் குலுங்க, அந்த மூன்று குழந்தைகளில் ஒன்று மறுபடியும் அந்த முதியவர்மீது புரண்டு விழுந்து எழும்பியது.

''ஏய்... என்ன இது... என்னுடைய உடைகள் எல்லாம் அழுக்கடைந்துவிட்டன. இனி நான் இந்த உடைகளோடு எப்படிப் போகமுடியும்?"

கிழவர் கோபத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டார்.

அந்தக் குழந்தைகளின் தகப்பன் கிழவரிடம் மன்னிப்புக் கேட்டான். அது அந்தக் கிழவருக்குத் துணிவைக் கொடுத்திருக்க வேண்டும். கோபத்தில் அவரது உடல் நடுங்கியது.

''பார் என்னுடைய ஆடைகளை.... இப்படியே என்னுடைய டொக்டரிடம் எப்படிப் போவது? நீ என்றால் எப்படியும் எங்கேயும் போவாய்... நானும் உன்னைப்போல போக முடியுமா?" என்று அவனைப் பார்த்துப் பொரிந்து தள்ளினார் கிழவர்.

அவன் மொழியறிவின்மையாலோ அல்லது அவரது பேச்சில் தொனித்த உண்மையினாலோ மௌனமாக ஒரு குற்றவாளியைப்போல நின்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குப் பக்கத்திலிருந்த ஆபிரிக்க மாது சினத்துடன் அந்தக் கிழவரைப் பார்த்துக் கத்தினாள்.

''என்ன சொன்னாய்... நீ போக முடியாது... அவர் மட்டும் அழுக்கான உடுப்புகளோடு போகலாமா? வெளிநாட்டவர் என்றால் உனக்கு அவ்வளவு இளக்காரமா?"

திடீரென அவள் அவ்வாறு குறுக்கிடுவாள் என்பதை அந்தக் கிழவர் எதிர்பாராததைப்போல சற்றுத் தடுமாறினார்.

''மனதிலை கொஞ்சமாவது ஈரம் வேண்டும்... இயந்திரங்களோடு இயந்திரங்களாக மாறிவிட்டாதே.." என்று அவள் தொடர்ந்து கூறினாள்.

'போதும். பிரச்சினையை வளர்க்காதே. விட்டுவிடு' என்பதுபோல் தர்மசங்கடத்துடன் நெளிந்தான் அந்தப் பிள்ளைகளின் தந்தை.

அவள் சற்று மௌனித்தாள்.

அப்போது....

''அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? எப்படியும் வாழலாம் என்றுதானே இங்கு வெளிநாட்டவர் வருகிறார்கள். இப்படித்தான் வாழ்வோம் என்று நினைத்தா வருகிறார்கள்? எந்த வீடு கிடைத்தாலும் பரவாயில்லை, எந்த விசா தந்தாலும் பரவாயில்லை, என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை என்றுதானே வருகிறார்கள்... எங்களுடைய நாடு.... இந்த வீடு தருகிறேன், இந்த விசா தருகிறேன், இந்த வேலை தருகிறேன் என்று சொல்லியா அழைத்தது... அவர் சொன்னதில் என்ன தவறைக் கண்டு இப்படி ஆத்திரப்படுகிறாய்..."

அந்த ஆபிரிக்கப் பெண்ணை நோக்கி வந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தேன்.

எனது வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் பாட்டி. என்னைப் பார்க்காமல் அந்த ஆபிரிக்க மாதையே சினத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

''ஓ... நீ இந்த நாட்டிலை பிறக்கப் போவதைத் தெரிந்துகொண்டுதான் வந்து பிறந்தாயாக்கும்..." என்று ஏளனமாகக் கேட்டாள் அந்த ஆபிரிக்கப் பெண்.

தனக்குச் சாதகமாக ஒரு குரல் ஒலித்ததால் கிழவர் உற்சாகமாகிவிட்டார்.

''வந்ததுதான் வந்தார்கள்... எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கலாம் அல்லவா? பிள்ளைகளை ஒழுங்காக வைத்திருக்கலாம் அல்லவா? இயலாவிட்டால் பிள்ளைகளை பெறாமல் இருக்க வேண்டியதுதானே... ஐந்தாறு பிள்ளைகளைப் பெறவேண்டியது.... அதுகளை வளர்க்கத் தெரியாமல் வளர்க்கவேண்டியது... அளவாய் பெறலாம்தானே... இப்படியே போனால் நாங்களெல்லாம் வேறொரு நாட்டுக்கு அகதியாகப் போகவேண்டியதுதான்..." என்று வெறுப்பு மேலிடக் கூறினார் கிழவர்.

''உனக்குத்தான் பேசத் தெரியுமா? எங்களுடைய நாடுகளுக்கு நீங்கள் வந்து சுரண்டாவிட்டால் நாங்கள் ஏன் இங்கே வரப்போகிறோம்? ஆயுதங்களைக் கொடுத்து அங்கே அடிபடவிட்டு எங்களுடைய நாடுகளையே பாழாக்கிக்கொண்டு, நல்ல மனிதர்மாதிரி வேசம்போட வேண்டாம்... உங்களால் எங்களுடைய நாடுகளை நம்பாமல் வாழ முடிகிறதா என்று பாருங்கள்... அப்படி வாழ்ந்தால் நாங்களும் இங்கே வரமாட்டோம்...." என்று திருப்பிக் கத்தினாள் அந்த ஆபிரிக்க மாது.

பிள்ளைகளைப்பற்றிய பேச்சு கைகளில் பாரம் நிறைந்த பைகளுடன் நின்றிருந்த துருக்கி நாட்டுப் பெண்ணின் உணர்வுகளையும் பாதித்திருக்க வேண்டும். அவளும் ஆபிரிக்கப் பெண்ணுடன் சேர்ந்துகொண்டாள்.

''பிள்ளைகளின் அருமை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது... நாய்களை மடியில் வைத்துக் கொஞ்சுவீர்கள்... மனிதர்களை அவமானப்படுத்துவீர்கள்... நாய்களுக்கு செலவிடும் பாசத்தில் கொஞ்சமாவது பிள்ளைகளுக்குக் காட்டமாட்டீர்கள்..."

தனக்குத் தெரிந்த அனுபவத்தை வெளியே கக்கினாள்.

அவளின் வார்த்தைகளிலுள்ள நியாயத்தை என்னால் உணர முடிந்தது. நாய் என்ற ஒரு மிருகத்துக்குக் கொடுக்கும் மதிப்பில் ஒரு சிறுபங்கையாவது வெளிநாட்டவருக்கு, குறிப்பாக ஆசிய ஆபிரிக்கக் கறுப்பர்களுக்குத் தர எத்தனை மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்?

எண்ணத்தில் எழுந்த கேள்வி மனதைக் குடைய ஆரம்பித்தது.

வஸ்ஸின் முன்னே முதலாம் இலக்க 'ட்ராம்' வண்டி சென்றுகொண்டிருந்தது. திடீரென வீதியில் வாகனங்களின் நெருக்கம் அதிகரித்தது. வாகனங்கள் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன.

யன்னல் கண்ணாடி வழியே முன்னே பார்க்க முயன்றேன்.

'ட்ராம்' வண்டிப் பாதையைக் கிளறி, அதில் போட்டிருந்த சீமேந்துக்கு மேலே கற்களைச் சீராக அடுக்குவதில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது வீதிகள் பலவற்றில் தார் ஊற்றப்படுவதற்குப் பதிலாக சீமேந்துக் கலவைகள் போட்டு உறுதிப்படுத்தப்படுவது ஜேர்மன் நாட்டில் அதிகரித்திருக்கிறது.

ஆனால் எங்கள் நாட்டில்...?!

சீமேந்துக் கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே மண்ணெல்லாம் சீமேந்தாகிப் புதுப்பொலிவு காட்டுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் ஆயுதங்களைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?!

ஒன்று அழிய இன்னொன்று உருவாகிறது.

என்னால் பெருமூச்சொன்றைத்தான் விட முடிகிறது.

அந்த வாகன நெருக்கத்துக்குள்ளால் விடுபட்டு மூச்சுப் பெற்றதைப்போல வேகமெடுத்த வஸ் அடுத்த தரிப்பிடத்தில் நிற்க, ஜேர்மன் வாலிபன் ஒருவன் இரண்டு பெரிய நாய்களுடன் உள்ளே ஏறினான்.

அந்த நாய்கள் இரண்டும் புது உற்சாகம் பெற்றவையாக வஸ்ஸினுள் அருகேயிருந்த பயணிகளின் பாதங்களை முகர்வதும் வாலை ஆட்டுவதுமாக இருக்கைகளுக்குக் கீழே நுழைந்து உள்ளே புகுவதும் வெளியே வருவதுமாக இருந்தன.

இவ்வளவு நேரமாகக் குறுகுறுத்தவாறு ஓடித் திரிந்த அந்த மூன்று குழந்தைகளும் தந்தையுடன் போய் ஒட்டிக்கொண்டு பயத்துடன் 'திரு, திரு'வென விழித்தார்கள்.

எனக்குச் சிரிப்பாக இருக்கிறது அவர்களைப் பார்க்க. மனிதர்களுக்குப் பயப்படாதவர்கள் நாய்க்குப் பயப்படுகிறார்கள்.

ஒரு நாய் அந்தக் கிழவரின் சப்பாத்துக் கால்களை மோப்பம் பிடிக்கிறது. கிழவரின் முகத்தில் கோபம் தணிகிறது. இறுகிப் போயிருந்த முகம் சற்றுத் தளர, நாயின் கழுத்தை வருட ஆரம்பித்தார். அதனால் உற்சாகமடைந்த நாய் அந்தக் கிழவரது கரத்தை நக்கத் தொடங்கியது.

''ஏய்... இங்கே வந்து இரு" என்று நாயை அதட்டி உத்தரவிட்டான் நாய்ச் சொந்தக்காரன்.

''பரவாயில்லை... அதைத் தடுக்காதே" என்ற கிழவர்,
''எத்தனை வயது... என்ன பெயர்..." என்று நாயைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

சற்று முன்னாலிருந்த வாதங்களும் சத்தங்களும் அந்த நாய்களின் வருகையால் அடங்கிவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டிகூட பலருள் ஒருவராக அந்த நாய்களின் செய்கைகளை ஆவலோடு அவதானிப்பது தெரிகிறது.

அந்த நாய்களில் ஒன்று உடலைக் குலுக்கி சோம்பல் முறிக்கிறது. அதன்மேலுள்ள தூசுகள் நாலாபுறமும் சிதறுகிறது.

எனக்கு அருவருத்தது. அடக்கிக் கொண்டு அருகே அமர்ந்திருந்த ஆபிரிக்கப் பெண்ணைப் பார்த்தேன். அருவருப்பை தனது முகச்சுழிப்பின் மூலமாக அப்பட்டமாகவே வெளிக்காட்டினாள் அவள்.

அந்த நாய் தற்போது உரிமையுடன் அந்தக் கிழவரின் மடியில் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிப்போடுகிறது. கிழவர் சிரித்தவாறு அதன் முதுகைத் தட்டிக்கொடுத்தவராக தலையைத் தடவ ஆரம்பித்தார். தனது உடைகள் அழுக்கடைவதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்போது பஸ் இன்னொரு தரிப்பிடத்தில் நிற்க, ஒரு பெண் சிறிய குட்டிச் சடை நாயொன்றுடன் ஏறினாள். அதன் ரோமங்களை அழகாகச் சீவி அலங்கரித்திருந்தாள். அந்தக் குட்டி நாயைக் கண்டதும்தான் தாமதம்... அந்த இரண்டு பெரிய நாய்களும் குட்டி நாயை முறைத்து உறும ஆரம்பித்தன. அந்தக் குட்டி நாயும் தானொன்றும் அவைகளுக்குச் சளைத்ததல்ல என்பதுபோல பதிலுக்கு சத்தமாகக் குரைக்க ஆரம்பித்தது.

வஸ்ஸினுள் மனிதர்களின் சத்தம் குறைய நாய்களின் சத்தம் அதிகமாகியது.

நாய்கள் நன்றியுள்ளவை என்கிறார்கள். எஜமான் விசுவாசம் மிக்கவை என்கிறார்கள். அந்த நாய்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றன? ஏன் ஒரே இனம் என்பதை நினைத்துப் பாராமல் சண்டையிட்டுக் கொள்கின்றன?

அப்போது எனக்குள் எனது இனத்தைப்பற்றிய எண்ணம் எழுந்தது.

அடுத்த தரிப்பிடத்தில் நான் இறங்கவேண்டும்.

எனது கைப் பையைத் திறந்து, அதனுள்ளிருந்த சிறிய கண்ணாடியை எடுத்து, சிவப்புநிற 'ஸ்டிக்கர்' பொட்டு சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்கிறேன்.

தற்செயலாக எங்கடையள் யாராவது கண்டால், 'உங்கா பார்.... புருசன் உயிரோடை இருக்க பொட்டில்லாமை திரியிறாள்...' என்று வசைபாடுங்கள்.

நான் இறங்குவதற்கு ஆயத்தமாகிறேன்.

ஆனால்...

அந்த நாய்களைப்பற்றிய எண்ணங்கள்மட்டும் என்னைவிட்டு இறங்க மறுக்கின்றன.

(பிரசுரம்: கலையோசை 1997)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!