செவ்வாய், 21 மே, 2013

விரிசல்

ன்று ஒரு கலைமன்றத்தின் ஆண்டுவிழா.

மேடையில் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, கழுத்தில் தொங்கிய மலர்மாலை கொடுத்த பூரிப்புடன் வெளிநாட்டவர்களுக்குச் சார்பாக உரையாற்றிக் கொண்டு இருந்தாள்.

அவளின் பேச்சில் தமக்கேதோ பல சலுகைகள் கிடைத்துவிட்டன அல்லது கிடைத்துவிடும் என்றமாதிரி கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள் அங்கு கூடியிருந்த தமிழர்கள்.

பெண்கள்கூட அக்கம்பக்கத்தில் மினுமினுக்கும் ஆடை ஆபரணங்கள் தங்கள் அணிகலன்களிலும் பார்க்கத் தகுதி கூடியதா குறைவா என்ற ஆராய்ச்சியை ஒத்திவைத்துவிட்டு அவளின் பேச்சில் அக்கறையாக இருந்தார்கள். ஏனெனில் புதுச் சட்டங்களைக் கூறிப் பயமுறுத்திவிடுவாளோ என்ற பதட்டம்.

இவ்வளவு காலம் இங்கிருந்துவிட்டு ஊருக்குப் போகவேண்டி நேரிட்டால் பதட்டமாகத்தானே இருக்கும்.

அங்கே கிணற்றில் தண்ணீர் அள்ளத்தான் முடியுமா?

தினம் தினம் இறைச்சி இல்லாமல் வாழத்தான் முடியுமா?!

ஏன் இவ்வளவு?!

திராட்சைப்பழம் வேண்டுமானால்கூட ஊரிலிருந்து டவுனுக்குத்தானே போகவேண்டும்?!

அப்போது மண்டபத்துள் நுழைந்த கோபாலைப் பார்த்ததும் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் கேசவன்.

கேசவனின் முகமாற்றத்தைக் கவனித்த அகல்யாவுக்கு மனம் சங்கடப்பட்டது.

ஒரு சிறு சம்பவம் கேசவனையும் கோபாலையும் பரம எதிரிகளாக்கிய விந்தையை அகல்யாவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

எத்தனையோ தமிழர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைப் பார்த்து, உயிர் வாழத் தஞ்சம் கேட்டுவந்த நாட்டில் தங்களுக்குள்ளேயே பிரச்சினைப்பட்டு, ஏன் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள்மீது ஆத்திரப்பட்டிருக்கிறாள்.

ஆனால் தற்போது அவளின் கண் முன்னாலேயே ஒரு சிறு விசயத்துக்காக கணவன் கேசவனுக்கும் கோபாலுக்கும் பிரச்சினை வரும் எனக் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக கேசவனும் கோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஆபத்து அந்தரமென்றால் ஒருவருக்கு ஒருவர் வலியச்சென்று உதவி செய்வதில் முன்னிற்பார்கள்.

கேசவன் ஜேர்மனிக்கு வந்து நான்கைந்து வருடங்களுக்குப் பின்புதான் ஒரு ஏஜென்சிமூலம் அகல்யா வந்தாள்.

"அகல்யா! கோபால்மட்டும் இல்லையெண்டால் உன்னை நான் கலியாணமே கட்டியிருக்க ஏலாது. ஏஜென்சிக்கும் டெலிபோனுக்கும் காசில்லாமை எத்தினை பேரிட்டை அலைஞ்சிருப்பன். எல்லாரும் பொறுப்புக்குப் பவுண் இருக்கே எண்டு கேட்டுக் கைவிரிச்சுப் போட்டினம்."

"கோபாலிட்டை நான் காசு கேக்க விரும்பேலை. அவன் பாவம். குடும்பப் பொறுப்புள்ளவன். சகோதரங்களைக் கரைசேர்க்க ஏலாமைக் கஸ்டப்படுறவனை நானும் கஸ்டப்படுத்தக் கூடாதெண்டு கேக்கேலை!"

"அப்படியிருந்தும் நான் பட்டபாட்டைப் பார்த்து பொறுப்பும் இல்லாமை வட்டியும் வேண்டாமெண்டு வலிய வந்து உதவி செய்தவன்."

இப்படித்தான் கோபாலை அகல்யாவுக்கு அறிமுகம் செய்தான் கேசவன். அந்த அறிமுகமே அவளுக்குக் கோபாலிடம் தனி மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

ஒருமுறை கேசவனின் ஒரு சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அரசியல், உலக நடப்புக்கள் என்று உரையாடல் மணித்தியாலங்களை விழுங்கிக் கொண்டிருந்தது. அவர்களில் மூர்த்தி என்ற ஒருவன். ஜேர்மனிக்கு வந்து பல வருடங்களாம்.

வார்த்தைக்கு வார்த்தை "டேய் கேசவன், வாடா கேசவன், போடா கேசவன்" என்று மரியாதையில்லாமல் விளித்துக் கொண்டிருந்தான்.

நண்பன்தானே, "வாடா, போடா" எனக் கதைப்பது இயற்கைதானே என அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

ஏனெனில் மூர்த்தியின் வார்த்தைகளில் நட்பின் நேசத்திற்குப் பதிலாக ஏதோ ஒரு அதிகாரம் தொனிப்பதை உணர முடிந்தது.

ஒருமுறை மூர்த்தியைத் தனியே சந்திக்க நேரிட்டபோது மனதில் தோன்றியதைத் தெளிவாகக் கூறிவிட்டாள்.

"நீங்களும் அவரும் நண்பர்களாய் இருக்கலாம். ஆனால் எனக்கு முன்னாலை அவரை வாடா போடா எண்டு கூப்பிடாதையுங்கோ. எனக்குப் பிடிக்கேலை."

மூர்த்தி பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகச் சென்றுவிட்டான்.

விசயம் அறிந்த கேசவன் துள்ளிக் குதித்தான்.

"நீ அவமானப்படுத்திப்போட்டாய் அகல்யா. எங்களுக்குள்ளை ஆயிரம் இருக்கும். அதை ஏன் நீ கவனிக்கிறாய்?"

அப்போது கோபாலும் அங்கிருந்தான்.

"இதோ பாருங்க கோபால் அண்ணை! நான் சொன்னதிலை என்ன பிழை? இவர் பலபேருக்கு முன்னாலை கைகட்டிச் சேவகம் செய்யலாம். பலபேருடன் சினேகிதமாய் இருக்கலாம். ஆனால் வீட்டிலை என்னுடைய கணவர் குடும்பத் தலைவன். தலைவனுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்துத்தான் ஆகவேணும்!"

"என்னை ஜேர்மனிக்குக் கூப்பிட எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறார்.... உங்களைத் தவிர வேறை ஆர் உதவி செய்தவை? ஆபத்துக்கு உதவாதவை அதிகாரமாய் என்ரை கணவரை நடத்துறதை எப்பிடி என்னாலை பொறுத்துக்கொள்ள முடியும்? இண்டைக்கு நாங்கள் சேர்ந்து வாழுறத்துக்கு நீங்கள் ஒருத்தர்தான் உதவியிருக்கிறியள். அதனாலை உங்களை என்ரை அண்ணர் ஸ்தானத்திலை வைச்சிருக்கிறன். அண்ணை என்ரை கணவரை உரிமையோடை வாடா போடா எண்டு கூப்பிடுறதைப்பற்றி நான் கவலைப்படமாட்டன்" என்று நன்றி உணர்வுடன் கூறிய அகல்யாவைப் பாசத்துடன் நோக்கினான் கோபால்.

இவ்வளவுதூரம் குடும்பத்தில் ஒருவனாகப் பழகிய கோபாலுக்கும் கேசவனுக்கும் இடையே பிளவு ஏற்பட அன்று நிகழ்ந்த சம்பவம்தான் காரணமாயிற்று.

மாலை ஐந்து மணி.

தொலைபேசி மணி அலறி அழைத்தது.

"நான் கோபால் கதைக்கிறன். நீ செய்யுறது கொஞ்சங்கூட நல்லாயில்லை."

"என்னடாப்பா ஏறிப் பாயுறாய்?"

"நான் பாயேல்லை. நீதான் என்னை மறந்து பாயுறாய். ஹோட்டல் கூட்டுற வேலைக்கு ஏன் அந்த மாதவனைக் கூட்டிக்கொண்டு போனனீ?! நான் வந்திருப்பன்தானே?!"

"அதைக் கேக்கிறியே? மாதவனுக்கு ஓமெண்டு சொல்லிப்போட்டன். அதிலை என்ன தப்பு?!"

"ஏன்.... நான் செய்யமாட்டனே? எனக்கு இப்ப வேலை இல்லை எண்டு உனக்கு நல்லாய்த் தெரியும். அப்பிடி இருக்கேக்கை என்னைவிட்டுட்டு அவனை ஏன் கொண்டு போறாய்?"

"இஞ்சை பார் கோபால். நீ வேலை இல்லாமை இருக்கிறது நினைவில்லாமை மாதவனை வேலைக்குக் கூட்டிக்கொண்டு  போறதாய்ச்  சொல்லிப்போட்டன். இனி சொன்ன சொல்லை எப்பிடி மாத்தேலும்?"

"எனக்கு அதைப்பற்றித் தெரியாது கேசவன். நான்தான் போன வருசம் மூண்டு மாதம் அந்தக் ஹோட்டலிலை உன்னோடை வேலை செய்தனான். இந்த முறையும் அந்த வேலை எனக்குத்தான் உரியது. அதாலை சொல்லுறன். மாதவனை நிப்பாட்டிப்போட்டு என்னைக் கூட்டிக்கொண்டு போ!"

"ஓமெண்டு சொல்லிப்போட்டு இல்லை எண்டு சொல்ல என்னாலை ஏலாது."

"அப்ப நான் நேரடியாய் ஹோட்டல் முதலாளியோடை கதைச்சுக் கொள்ளுறன்."

"என்னை மிஞ்சி அவன் ஆருக்கும் வேலை குடுக்கமாட்டான்!"

"அதையும் பாப்பம்."

கோபாலின் குரலில் கோபம் பொங்கிவழிந்தது.

"என்னத்தைப் பாக்கப் போறாய்?!"

"எனக்கில்லாத வேலையை அந்த மாதவன் எப்பிடிச் செய்வான் எண்டு பாப்பம். ஒரு ரெலிபோன் சொன்னது கேக்கும்!"

"ஓகோ களவாய் வேலை செய்யுறதைக் காட்டிக் குடுக்கப்போறியோ? ச்சீ.... நீயும் ஒரு மனிசனே! இனிமேல் இந்த வீட்டுப்பக்கம் வராதை."

'ரிசீவரை'ப் படாரென அறைந்து வைத்தான்.

அன்றிலிருந்து கேசவனும் கோபாலும் எதிரிகளாகிவிட்டனர்.

ரெலிபோனில் கூறியபடி கோபால் காட்டிக் கொடுக்கவில்லை.

ஏதோ ஆத்திரத்தில் பேசிய வார்த்தை அது. அதற்காக நல்ல நண்பர்கள் பிரிந்திருப்பது அகல்யாவுக்கு  மனவருத்தமாக இருந்தது.

பழைய நினைவுகளிலிருந்து மீண்ட அகல்யா மேடையைக் கவனித்தாள்.

நாலு ஐந்து சிறுமிகள் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்த முயற்சியை மேடையேற்ற முதல் செய்திருக்கலாமே என்று எழுந்து நின்று ஓங்கிக் கத்தவேண்டும் போலிருந்தது.

அப்போது இரண்டு மூன்று இளைஞர்கள் திடீரெனக் கேசவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களின் மேல் மதுவின்வாடை அமர்க்களமாக வீசியது.

"டேய் கேசவன். எங்கடை மன்றத்தைப்பற்றி 'மூளை' எண்ட புத்தகத்திலை என்னடா தாறுமாறாய் எழுதனீ?! வாடா வெளியிலை. எழுதின கை எப்பிடி இருக்கெண்டு பாப்பம்" என்றவாறு ஒருவன் கேசவனின் 'சேட்'டைப் பற்றி இழுத்தான்.

அகல்யா பயந்து நடுங்கினாள்.

கூடியிருந்தவர்கள் விடுப்புப் பார்த்தார்களே தவிர, உதவிக்கு வந்து அவர்களைத் தடுக்கவில்லை.

அப்போது-

"டேய் விடுடா சட்டையை. அவன் உள்ளதைத்தானேடா எழுதினவன். கேசவனிலை தொட்டியெண்டால் குடலை எடுத்துப்போடுவன்" என்ற கர்ஜனை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் அகல்யா.

அங்கே கோபால்!

அவர்கள் அங்கிருந்து அகன்றார்கள்.

ஆபத்துக்கு வலியவந்து உதவிய சகோதரனைக் கண்ட ஆனந்தத்தில் அகல்யாவின் கண்கள் கலங்கின.

கோபாலின் கையைப் பிடித்தபடி ஏதோ பேச முயற்சித்தான் கேசவன்.

அவர்கள் பேசட்டும். விட்டுவிடுவோம்.

 
(பிரசுரம்: பூவரசு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!