வெள்ளி, 10 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 14

"அண்ணா! என்ன சொல்லுறாய்? உண்மையாய் அப்பிடிச் செய்தாளா?"

"ம்.. பொய்யா சொல்லுறேன்.. நேற்று சுஜி வந்து தன்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'பண்ணிட்டாள் எண்டபோது என்னாலைகூடத்தான் நம்ப முடியேலை..
எவளவு நல்ல பெண் எண்டு பிருந்தாவை நினைச்சன்.. யாரை நம்புறது.. யாரை நம்பக் கூடாதெண்டு விளங்கேலை.. வாழ்க்கையிலை சிலபேர் ஏதோ அற்ப சொற்ப சுகங்களுக்காக ஆள்மாறாட்டம் மோசடி செய்யுறாங்களெண்டால்.. 'சற்'றிலையும் இப்பிடியா?"

மனம் நோக சுதாவிற்கு எழுதினேன். யாரிடமாவது என் சுமைகளைக் கொட்டினால்தான் ஆறுதல் கிடைக்கும்போலிருந்தது. சுஜி வந்ததிலிருந்து மனம் குழம்பிவிட்டது. இதுவரை கடந்து வந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய ஏமாற்றம். வலிய அழைத்து தினமும் கதை பல பேசி, களிப்பால் குளிப்பாட்டிச் சிந்தை கவர்ந்து, மனதில் மாளிகையாய் சிலிர்த்தெழுந்து, சில மாதப் பொழுதுகளின் சிருங்காரத் தாலாட்டுக் கனவுளைச் சடுதியாய் சவமாக்கிய பிருந்தாவின் தாக்கம் ஒரு சில நாட்களுள் தடமற்றுப் போய்விடுமா, என்ன?!

அவள் தந்த வடுவின் வேதனைகளை அள்ளிக் கொட்டி அகற்ற ஒரு வாடிகாலாவது வேண்டுமல்லவா?!

"என்னாலையும் நம்ப முடியேலைடா.. அண்ணா! என்னோடைகூட அவள் நல்லபிள்ளைமாதிரி 'அக்கா, அக்கா' எண்டு 'சற்'பண்ணினாளே.. ம்.. 'சற்' பொழுதுபோக்கெண்டு நினைச்சால்.. அந்த பொழுதுகளையும் ஏமாற்றுறதுதானா 'சற்'? என்னவோ.. இந்தமட்டிலையாவது 'பிருந்தா, பிருந்தா' எண்டு உயிரைவிடாமைத் தப்பீட்டாய்.."

காதலித்து, அதன் பிரதிபலனாய் கவலைகளுடன் தவித்திருக்கும் சுதா, எனக்காக 'மெசன்சரில்' கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

"அண்ணா.. என்னமோ.. அந்த சுஜி சொன்னமாதிரி சாருவை கலியாணம் செய். உன்ரை மச்சாள்தானே? சின்னன்லை இருந்தே உன்னைப்பற்றித் தெரிஞ்சவள். உனக்கும் அவளைத் தெரியும்.."

"ம்..."

"உன்ரை பலம் பலவீனங்கள் அவளுக்குத் தெரியும்.. அவளின்ரை பலம் பலவீனங்கள் உனக்குத் தெரியும்.. அதாலை சின்னச் சின்னப் பிரச்சினையள் எண்டாலும் 'அட்ஜஸ்மென்ற்' (adjustment) இருக்கும்டா.."

"ம்.."

"அதோடை.. என்னைப் பார்... பதினாறு வயசிலை காதல் எண்டு தாய் தகப்பனை.. சொந்த பந்தங்களை மதிக்காமை வீட்டைவிட்டுப் போனன்.. இப்ப.. நம்பினவன் ஏமாத்த... மறுபடியும் அப்பா அம்மாதானே எனக்குத் தஞ்சம் தந்திருக்கினம்.. என்ன இருந்தாலும் பெத்தவங்க பிள்ளைகளைக் கண்கலங்க விடமாட்டாங்கடா.. அதாலை சொல்லுறன். உன்ரை அம்மாவும் நீ சாருவை கலியாணம் செய்யுறதை விரும்புறதாலை.. அதை ஏன் கெடுக்கிறாய்? ஒரு தாயின் மனசு வாழ்த்தினாலே வாழ்க்கை வளமாக அமையும்.."

"ம்..."

"என்ன ம்.. ம்.. எண்டுறாய்.. சாருவை கட்டுறியா இல்லையா எண்டு சொல்லன்.."

"சும்மா இருடி.. நிறைய யோசிக்கணும்.."

"ம்.. பெரிய யோசினைதான்.. என்னவோ செய்.. இனியும் சும்மா மொக்கன்போலை ஏமாறாதை.. சொல்லிட்டன்.."

"ம்.."

"என்னடா கவலையா? கவலைப்பட்டால் வாழேலாதுடா.. என்னைப் பார்.. ஏதோ வாழத்தானே வேணும்.. அப்பிடித்தான்.. இனியாலும் புத்திசாலியா முடிவெடு"

"ம்.."

"லொள்.. இண்டைக்கு 'ம்'போடுறதெண்டே முடிவெடுத்திட்டியா.. அப்பிடியே 'ம்'மெண்டிரு.. நான் போவிட்டு வாறேன்.."

"ம்.."

அவள் போய்விட்டாள்.

சுதாவுடன் பேசியதில் மனம் ஓரளவு அமைதியடைந்ததுபோன்ற உணர்வு. மனதில் இவ்வளவுகாலமும் ஏற்பட்ட புழுக்கம் தணிந்ததுபோலிருந்தது.

படுக்கையில் விழுந்து கண்களை மூடிக்கொண்டேன்.

புதியதோர் பரவச உணர்வு ஊற்றெடுத்து நாடிநரம்பெல்லாம் பொங்கிப் பிராவகமாகி, தேகத்துள் பரவி, மனதின் பாரங்களைப் பஞ்சாக்கி என்னை எங்கோ பிரபஞ்சத்தில் மிதக்கவைப்பதுபோன்ற பிரமை.

என் கண்களுள் கற்பனைக் குதிரைகள் விரைந்தோடிவந்து கதைகூற விளைந்தன.

அந்த ஆனந்த உணர்வுகள் எனக்குத் தேவையாக இருந்தன. ஏனெனில் என்னைச் சுற்றிச் சுழன்டிறெழும் ஆனந்த உணர்வுக் குவியல்களின் உச்சியில் சாரு மென்முறுவலுடன் எனக்காக நடமாடினாள்.

எனக்கு நன்றாகவே புரிந்தது, என் தெளிந்த மனதில் கலந்த உறவு சாருதான் என்று.

அவளிடம் என்னிலையை உடனே கூறவேண்டும்.. எனினும் ஏதோ ஒரு அச்ச உணர்வு என்னைத் தடுத்தது. திடீரெனக் கூறும்போது என்ன எண்ணுவாளோ என்ற அச்சம்..!

எனினும், ஏக்கம் நிறைந்த விழிகளுடன் என்னைச் சிறைப்பிடிக்க முயலும் அவளுக்கு என் மனதைத் திறந்து, அங்கே அவள் புகுந்துவிட்டதைத் தெரிவித்தே ஆகவேண்டும்.

அப்போது அவளது நிலை என்னவாக இருக்கும்?! ஓடிவந்து கட்டியணைத்துக் கலகலப்பாளா? அறிய மனம் குரங்காகத் தாவியது.

எங்கும் அமைதி... எங்கும் நிசப்தம்... சுவர்க் கடிகாரம் 'டிக்,டிக்' என்று நிசப்தத்தை விரட்ட முயன்றுகொண்டிருந்தது.

அப்போது... யாரோ மெதுவாக நடந்து வரும் ஒலி. அந்த ஒலி என்னை நோக்கித்தான் அண்மித்துக்கொண்டிருந்தது.

அந்த இருளில், அந்த உருவம் கட்டிலருகே வந்து என் பக்கத்தில் அமர்ந்தது.

'சாரு...!'

இந்த நேரத்தில் இந்த இடத்தில் சாருவா? நம்பமுடியாமல் ஆனந்தம் அணையுடைத்தது.

"சாரு..."

உணர்ச்சியில் நாத் தடுமாறியது.

அந்த அழகு நிலவு குனிந்து என் விழிகளை ஊடுருவியது. அந்த இருளைக் கிழித்தவாறு இரு கருவைரமணிகளாகக் கண்கள் பளபளத்தவேளையில், இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் என் கன்னத்தில் பட்டுத் தெறித்தன.

"என்ன சாரு..?"

பதட்டமாக அவளது கரத்தைப் பற்றினேன்.

"அத்தான்! எவளவுநாள்தான் பொறுக்க முடியும்... உங்கள் எண்ணத்தைச் சொல்ல இன்னும் காலம் வரல்லையா?"

குரல் விக்கியது. சிறு விம்மல் வெப்பியாரத்துடன் வெடித்தது.

"சாரு..."

அவள் தோள்களைப்பற்றி என்னுடன் அணைத்துக்கொண்டேன். அவளது மூச்சுக்காற்று என் மார்பைச் சுட்டது.

"சாரு..."

"ம்.."

"உன் பெயரை உச்சரிக்கத் தெரிந்த இந்த இதயத்திற்கு உன்னிடம் என் காதலைச் சொல்லும் தைரியம் ஏன் இல்லை..?!!"

"கவிதையா..?" - சிணுங்கினாள்.

"ம்.. நளாயினி தாமரைச்செல்வன் எழுதியது.. அதைமாதிரித்தான் இப்ப என் நிலை.. என் மனதைத் திறந்துகாட்ட துணிவுவரும் நாளுக்காக காத்திருந்தன்.."

அவள் காதுகளில் கிசுகிசுத்தேன்.

"உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும்..! உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடி நரம்பெல்லாம் வாத்தியமாகும்..!"

சிரிப்புடன் அவள் மேவாயை நிமிர்த்தினேன்.

"சாரு.. உனக்கும் கவிதை வருதே?"

"இதுவும் நளாயினியின் கவிதைதான்.. அவரது இன்னொரு கவிதை சொல்லட்டா.."

"ம்.."

"தெரியாததுபோல் உன் தேவை கருதி நீ எனைத் தொடும்போது என்னுள் மிருதங்க அதிர்வு.." என்று கூறிவிட்டு குறும்புடன் பார்த்தவளை அள்ளி அணைத்துக்கொண்டேன்.

அவள் கழுத்துள் முகம் புதைத்தேன்.

"ச்சீ.. மீசை குத்துது.."

"மீசை கூந்தலின் குழந்தை.. கவிஞன் சொன்னதுண்டு.. உன் கூந்தல் எந்தன் குழந்தையடி.. நான் சொல்கின்றேன்.." என்றவாறு அவள் கூந்தலை விரல்களால் வகிடெடுத்தேன்.

"இது யார் கவிதை?"

"இது கரவை பரணின்ரை.. அவர் கவிதை தெரியுமா?"

"சொல் எறிந்தாயா? கல் எறிந்தாயா? சலனப்பட்டு நிக்கிறது மனத்தடாகம்... தாமரைத் தடாகத்தில் அரும்பத் தொடங்கும் தாமரைபோல் உன் நிழல்.. "

"அடடே.. உனக்கும் கரவைபரணின்ரை கவிதை தெரிந்திருக்கே.."

"இது பரணியின்ரை கவிதை இல்லை.. நளாயினின்ரை கவிதை அத்தான்.. இன்னும் சொல்லவா?"

"ம்.."

"எந்தன் வருகையில் எந்தன் அழைப்பினில் உன் செவ்வாய் மலரவேண்டும்.."

"அப்படியா.."

துடிக்கும் அவளது அதரங்களை நாடினேன்.

"ச்சீ.. அது கரவைபரணியின் வரிகள் அத்தான்.."

வெட்கத்துடன் கைகளுள் நெளிந்தாள்.

"ஓ!! என் உதடுகளுக்கு உன் முகவரி இட்டு காதல் கடிதம் அனுப்பட்டும் இதயம்... "

சாரு விழியுயர்த்திப் பார்த்தாள்.

"இது நளாயினியின் கவிதை..."

குறும்புடன் சிரித்தேன்.

"என்றென்றும் நீதான் வேண்டும். இப்படித்தான் என்றில்லை. இப்படியேதான் வேண்டும். எனக்கே... எனக்காக வேண்டும். என்னையே உனதாக்கவும் வேண்டும்.. இதுவும் கரவைபரணியின் கவிதைதான் அத்தான்" என்றவாறு இருகரங்களையும் என் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டாள்.

"உன் சிறுத்த விழியினுள் என் விம்பம் நான் காணவேண்டும்.. என் மனதெங்கும் உன்வாசம் நீ சேர்க்கவேண்டும்.. இதுவும் அவர் கவிதைதான்.."

சிறகடித்துப் படபடக்கும் விழிகளை மெதுவாக ஒற்றினேன்.

உதடுகள் துடித்தன. கண்கள் செருகின.

துடிப்பை அடக்க நெருங்கியவேளையில்.. என்னை உதறித்தள்ளி எழுந்த சாரு 'கலகல'வெனச் சிரித்தாள்.

"சாரு.. "

ஏமாற்றத்துடன் கத்தினேன்.

அவளைக் காணவில்லை. எப்படி மறைந்தாள்?

எங்கும் அமைதி... எங்கும் நிசப்தம்... எங்கும் இருள்..!

"சாரு..."

கத்தியவாறு கட்டிலைவிட்டு எழுந்தேன்.

ஓ... எதிரே கொம்பியூட்டர் திரை ஒளிர்ந்துகொண்டிருந்தது.

'கனவா?'

ம்.. கனவுதான். இனிமையான கனவு.

'தனிமை எனது பொக்கிசம். பூக்களின் மொழி அறிய, சிட்டுக் குருவிகளின் சீண்டும் ஒலி உணர, தென்றலின் காதல் லீலைகளை காதோடு அணைத்துக் கொள்ள, எப்போதும் தனிமை அவசியம்!'

கரவை பரணியின் வரிகள் எண்ணத்தில் எட்டிப்பார்த்தன.

அந்த இனிமையை இரைமீட்டியவாறே கணனியை நோட்டமிட்டேன்.

சுஜி மெசன்சரில் என்னை அழைப்பது புரிந்தது.

ஓ.. என் முடிவு கேட்க வந்திருக்கிறாள். சிரிப்பு வந்தது. அவளுடன் பேச ஆயத்தமானேன்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!