வியாழன், 2 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 7

டந்த இரண்டு நாட்களாகவே அம்மா சந்தோசமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

சாரு குடும்பம் வந்த சந்தோசம் அவளுக்கு.

சாருவை இறுதியாகப் பார்த்து மூன்று வருடங்கள் இருக்கும். இந்த மூன்று வருட காலத்தில் அவளிடம்தான் எத்தனை மாறுதல்கள்..?!

கன்னங்கள் சதை பிடித்த மாங்கனிகளாக மினுங்க, செதுக்கி வைத்த மெழுகுப் பொம்மையாக அழகாக இருந்தாள்.

பூக்களில்தான் எத்தனை விதம்? ஒவ்வொன்றும் தனிரகம். எல்லாமே பூக்கும் காலத்தில் தனித்துவமான அழகுடன்தானே பொலிகின்றன?

அந்த தனித்துவம் சாருவிலும் தாராளமாகவே விளைந்திருந்தது.

அவளது தோற்றத்தில் பெரிய மனுசித் தோரணை அந்த இருபத்தொரு வயதில்..!

உருவம்தான் பெரிய மனுசியாகக் காட்டியதே ஒழிய, உள்ளம் என்னவோ முன்புபோலத்தான். அலைபாயும் கண்கள் வீட்டின் மூலை முடக்கெல்லாம் சுழன்றுகொண்டிருந்தன. அதிலே எதையாவது ஆராயத் துடிக்கும் பரபரப்பு. அந்த ஆராய்ச்சிக்குப் பயந்து கொம்பியூட்டரின் பக்கம் போவதையே இரண்டு நாட்களாக நிறுத்திவிட்டேன்.

அவளது தேடலில் எனது பிருந்தாவின் 'ஐடி' தெரிந்து... அதைப்பற்றிய ஆராய்ச்சியில் அவள் இறங்கினாள் என்றால்... முடிவு அம்மாவரைக்கும் போய், ஆயிரம் கேள்வி விசாரணை வித்தாரங்களால் 'என்னென்ன விளைவுகள் ஏற்பமோ?' என்ற அச்சம்தான் காரணம்.
எனினும் என் பிருந்தாவின் நினைவு என்னை வாட்டி வதைத்தது.

இனிய வசந்தம் என் மனதை வருடும் சுகமிழந்து தவித்தேன்.

விரிந்து கிடக்கும் யன்னலால் தென்றல் நுழைந்தாலும் புழுக்கம் போகவில்லை. அது வசந்தத்தின் ஏக்கத்தில் மனதைச் சுட்டெரித்தது.

'என் அரும் சகியே.. நான் வருவேன் என்று காத்திருந்தாயா?'

'என்னைக் காணாத ஏமாற்றத்தில் சீற்றமுற்றாயா?'

சிந்தனைகளுள் சிக்கித் தவித்தேன்.

'நீ எப்படி காத்திருப்பாய்.. என் மனதில்தானே எந்நேரமும் இன்பராகம் மீட்டிக்கொண்டிருக்கிறாய்.. சீற்றமென்ன செல்லமே.. உன் செவ்வாயாக வதனம் நிறம்காட்டி என்னை மோகனன் ஆக்கவா.. செல்லமே.. என் இனிய கனவுகளின் கதாநாயகியே.. என் சுவாசிப்பின் நறுமணமே.. எனக்குத் தெரியாதா உன்னை.. என் மன அதிர்வுகளை நீ உணர்ந்துகொண்டுதானே இருக்கிறாய்.. தூங்கும் பொழுதில் மூடும் என் விழிகளில் ஓடிவந்து பட்டுப் பாதம் பதித்து காதோடு நீ கனிரசம் பிழிவதை நான் இரசித்துக்கொண்டுதானே அதில் குளிக்கிறேன்.. இரு நாட்களல்ல.. இரு யுகங்கள்தான் எம்மை பிரித்துவிட முடியுமா என்ன?!'

எண்ணக்கிளர்வுகளும் கற்பனைகளும என்னைத் தாலாட்டின.

"அத்தான்.."

சத்தம்கேட்டு சுயநினைவடைந்தேன்.

இனிமையான நினைவுகள் இடையறுந்த எரிச்சல் குமிளியாகி.. நிதானித்து வெடித்து மறைந்தது.

சாருதான்.. அவளும்தான் என்ன செய்வாள்? இரண்டு நாட்களாக அம்மாவின் விடுப்பும் விசாரணைகளுமாக வெளிவந்த கேள்விகள் அவளைப் படாதபடுத்திச் சலிப்படைய வைத்திருக்கும்.

"அத்தான்.. என்ன சோகம்?"

"இல்லையே..!"

"ஏதோ கவலையா இருக்கிறமாதிரி தெரியுது.. நான் வந்தது பிடிக்கேலையா?"

"சொன்னனா.. எதையெதையோ கற்பனை செய்துகொண்டு காரணமும் சொல்லுறாய்.."

"நீ முந்திமாதிரி இல்லை.. என்கூட சரியாவே கதைக்கிறாய் இல்லை.. இந்த ரண்டு நாளா கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறேன்.. கேட்கிற கேள்விக்குமாத்திரம் பதில் சொல்லிப்போட்டு.. அங்கால போறாய்.."

அவள் சொல்வதும் உண்மைதான்.

நான் முன்புபோல இல்லைத்தான். எனக்கே புரிந்தவிசயம்தானே?! வலிய இயல்பை வலிந்தழைக்க முற்பட்டு தோல்வியையே சந்தித்துக்கொண்டிருந்தேன்.
முன்புபோல நண்பர்களுடன் சுற்றுவதை.. அரட்டை அடிப்பதை.. எல்லாமே குறைத்துவிட்டேன்.

நிதமும் எப்போது கணனியை போடுவேன்.. மெசன்சரை திறப்பேன்.. என் பிருந்தாவுடன் பேசுவேன் என்ற சிந்தனைதான்.

பிருந்தாவையே சுற்றிக் கொண்டிருக்கும் மனதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்று ஜோதி சொன்னதைக்கூட என் மனம் ஏற்க மறுத்தது. அவளது வயது பொய்யாக இருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப நம்பவைக்க முயன்றது.

எனினும் அவளிடமே கேட்டுவிட வேண்டும் என்ற ஆதங்கமும் அதிகரித்துக்கொண்டுதானிருந்தது.

அமைதியற்றுத் தவிக்கும் எனக்கு மேலும் இடையூறாக இவள்.. சாரு.. எனக்கே சிலவேளை என்னில் வெறுப்பாகத்தான் இருந்தது.

சாருவின் மேல் வெறுப்புற அவள் என்ன தவறு செய்தாள்?

ம்.. என்னவோ.. என்னை மாற்றமுடியாமல் அவதிப்பட்டேன்.

"சாரு.. அப்படி எதுவும் இல்லைடி.. நீ இப்ப பெரிய பெண்தானே.. இருபத்தொரு வயது.. முந்திமாதிரி பழக முடியாது.. சும்மா இரு.."

சமாளித்தேன்.

"ஐயோ.. லண்டனிலைதான் சுதந்திரமில்லை.. இங்கை உன்கூட ஜாலியா பொழுது போக்கலாம் என்று வந்தால் நீ சுத்த போர்டா.."

சிணுங்கினாள்.

"லண்டனிலை சுதந்திரம் இல்லையா..?"

"ம்.. இந்த டாடியும் மம்மியும் சரியான மோசம்.. நேரத்துக்கு வீட்டை வரணும்.. யாராலும் ரெலிபோன் பண்ணினா யார்.. எதுக்கு என்று ஆயிரம் கேள்வி.. அப்பப்பா.. இதுகள் திருந்தாதுகள்.. என்னையும் திருந்தவிடாதுகள்.."

எனக்குச் சிரிப்பாக இருந்தது.

ம்.. நாடு மாறினாலும் கட்டுப்பாடுகளை அதற்கேற்றமாதிரித் தளர்த்த விரும்பாத மனிதர்கள்..!!

"என்ன நீ பொய் சொல்லுறாய்.. இப்ப நீ 'கொஸ்ரல்'லதானே இருந்து படிக்கிறாய்..?"

"அங்கையும் ஒவ்வொருநாளும் ரெலிபோன் எடுத்து ஆயிரத்தெட்டு கேள்விகள்.. இதுகள் சிறீலங்காமாதிரி லண்டனையும் நினைக்குதுகள்."

அலுத்துக்கொண்டாள்.

இருவேறுபட்ட கலாச்சாரத்துக்குள் தமது வாரிசுகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பரண் அமைக்க முயலும் வந்தேறுகுடிகள். அவர்களின் பாதுகாப்பரண்களை சிறையாக எண்ணித் தகர்க்க முயலும் முகவரியறியாத வாரிசுகள்.

வேடிக்கையான வேதனைகள். மாற்றமுடியாத மாற்றீடுகள்.

இலக்குத் தெரியாத இலட்சியத் தோற்றங்கள்.

"ஏன் சாரு.. இப்படியான கரைச்சல்களால்தானே இப்ப கன பெண்கள் கணனியை தஞ்சமடைஞ்சிருக்கினம்.."

"என்ன..?"

வியப்புடன் பார்த்தாள்

"இல்லை.. வெளியிலை பழக.. பேச முடியாத கட்டுப்பாடுகளாலைதானே 'சற்'றிலை கனபேர் கதைக்கினம்.. பகிடி விடீனம்.."

"ஐயோ.. அத்தான்.. நீயும் 'சற்'பண்ணுறியா.. மாமி சொன்னவ. நீ கொம்பியூட்டரோட கிடக்கிறாய் என்று.. அதைப்பார்த்து விசரன்மாதிரி அடிக்கடி சிரிக்கிறாய் என்று கவலைப்பட்டவ.. அப்பவே நினைச்சனான்.. 'சற்'பண்ணுறாய் என்று.."

"ம்.. 'சற்'பண்ணினால் என்ன.. அதிலை என்ன தப்பு?"

"தமிழ் சனங்கள் 'சற்'றில உருப்படியா என்ன பண்ணுதுகள்.. வெறும் காதலும் கெட்ட வார்த்தையளும்தானே?"

எனக்கு 'சுருக்'கென தைத்தது.

"வீட்டிலை கதைக்க முடியாத குப்பைகளை 'சற்'றிலை கொண்டு வந்து துணிவாய் கொட்டுதுகள்.. ஒருநாளோடை நான் 'சற்' பக்கமே போறேல்ல.."

சாருவின் வார்த்தைகள் முகத்தில் அறைந்தன.

நான் மனக் குறுகுறுப்புடன் தவித்து நின்றேன்.

*********************************************

ன்று அம்மா என்னருகே வந்து அமர்ந்துகொண்டாள்.

ஏதாவது விசயம் இருந்தால்தான் அப்படி வருவாள்.

"தரன்.. சாருவை கூட்டிக்கொண்டு வெளியாலை போவிட்டு வாவன்.."

"நீங்கள் கூட்டிக்கொண்டு போங்கோவன்.."

"என்ன பிள்ளைடா நீ.. இருபத்தாறு வயசாகுது.. ஏன்தான் இப்பிடி இருக்கிறியோ தெரியேலை.. அவளை நாலு இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டன்.."

"வயதுக்கும் அவளைக் கூட்டிக்கொண்டுபோய் சுத்திக்காட்டுறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?"

"ம்.. அவள்தானேடா உன்ரை வாழ்க்கை முழுதும் உனக்கு துணையா வரப்போறவள்.. அவளை வெளீலை கூட்டிக்கொண்டு போகாமை ஆரைக் கூட்டிக்கொண்டு போகப்போறய்.. நல்ல அறிவுகெட்ட பிள்ளையும் அறிவுகெட்ட கேள்வியும்.."

செல்லமாகக் கடிந்துகொண்டவளை அதிர்ச்சியுடன் பேச்சுவராத இயலாமையுடன் நோக்கினேன்.


(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!