திங்கள், 6 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 11

"நீ சரியான மொக்குச் சாம்பிராணி.. உனக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை.. சரியான வெங்காயம்.. எதை யாரிட்டை சொல்லக்கூடாதெண்டு தெரியேலை.. எத்தனை வயதெண்டாய்.. இருபத்தாறோ.. வயது வளர்ந்தளவுக்குப் புத்தி வளரேலை.."

ஜோதிதான்... மெசன்சரில் பொரிந்து தள்ளினாள்.

வார்த்தைகளில் அனல் பறந்தது.

"நீ செய்த வேலையாலை அவள் என்னோடை சண்டை.. உன்னை யார் சொன்னது அவளிட்டை கேட்கச் சொல்லி.. இனி என்னோடை பேசமாட்டனெண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சுட்டாள்.. அவள் சரியான பிடிவாதக்காரி.. இனி அவளை சமாதானப்படுத்தேலாது..எல்லாம் உன்னாலைதான்.. வெண்ணெய்.. சரியான வெண்ணைய்.."

அவளின் வார்த்தைகள் என்னுள்ளும் சற்று சினத்தை ஏற்படுத்தினாலும் பொறுத்துக்கொண்டேன்.

பிருந்தாவின் மச்சாள் அல்லவா?!

அவளைத்தான் ஒரு நாளுக்கும் மேலாக காணவில்லையே?

அன்று 'உண்மையான வயது என்ன?' என்றும்... 'படம் வேணும்' என்றும் கேட்டபோது, 'போறேன்டா.. ஒரேயடியா போறேன்டா' என்று என்னை தவிக்கவிட்டு ஓடி மறைந்தவள்தான்.. இன்னும் வரவில்லை.

அவளது மச்சாளின் சீற்றத்தை அதிகமாக்கி ஜோதியின் தொடர்பு துண்டிப்பதை நான் விரும்பவில்லை. ஜோதியின் தொடர்பு அறுந்தால்.. பிருந்தாவைப்பற்றி வேறு எவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்?! அந்த எண்ணத்தில் அவளது வசவுகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு இளம் பெண் நேரடியாக இப்படிப் பேசுகிறாளோ இல்லையோ.. 'சற்'றில் சூடாக பேசிக்கொண்டிருந்தாள்.

இதுவும் ஒரு புது அனுபவம்தான்.

"ஜோதி.. என்னை இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?"

"என்னவோ.. எல்லாத்தையும் செய்துபோட்டு.. என்ன செய்யச் சொல்லுறாய் என்று கேட்டால்... அவளுக்கு பத்தொன்பது வயதில்லை எண்டு உனக்கு உதவிசெய்யத்தானே சொன்னேன்.. வீணாய் ஆசையளை வளர்த்து மோசம் போகாதை எண்ட நல்லெண்ணத்திலைதானேடா சொன்னேன்.. நீ என்னாடாண்டால்.. நான் சொன்னேனெண்டு என்னை அவளிட்டை மாட்டிப்போட்டு நீ நல்லபிள்ளைமாதிரி இருக்கிறாய்.. அவள் என்னடாவெண்டால்.. நேற்று முழுக்க ரெலிபோன் எடுத்து என்னோடை சண்டை.. ஏன்டி அப்பிடி சொன்னனீ எண்டு.. முதல்தடவையா குற்றவாளிபோலை அவளுக்கு ஒண்டும் பதில் சொல்லமுடியாமை கூனிக்குறுகி நிண்டன்.. எல்லாம் உன்னாலை.."

நான் சங்கடத்துடன் கதிரையில் நெளிந்தேன்.

தவறு என்னிடம்தானே?

"சொறிடா ஜோதி.. வெரி வெரி சொறி.."

"என்ன சொறி.. சொறி சொன்னாப்போலை எல்லாம் ஓகேயா?"

"ஜோதி! இப்போ என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? என் உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சு கொள்ளேன்.. காதல் என்றால் என்ன.. அதுக்கு வரைவிலக்கணம் சொல்ல ஆராலையுமே ஏலாது.. ஓரு வித்தியாசமான உணர்வு.. ஒரு வித்தியாசமான ஈர்ப்பு.. ஒரு புதுமையாக அனுபவம்.. ஒரு சுவையாக உறவு.. இல்லாட்டி அற்புதமான ஆசை.. இப்பிடி எதையெதையோ ஆளுக்காள் சொல்லலாம்.. ஆனால் என்னைப் பொறுத்தளவிலை.. எதுவென்று சொல்ல முடியாத தொடர்பு.. இதுதான் என்று சுட்டிக் காட்ட முடியாத மன தையல்.. தையல்தான்.. தையலால் வந்த தையல்.. அவளுடன் பேசும்போது என்னையே மறந்துடுறன்.. நீ சொல்லுறதுபோல முட்டாளாயிடுறன்.. ஏன்.. ஒரு களிமண் பொம்மைமாதிரி அவளுக்கு தலையாட்டிக் கொள்ளுறன்.. இதை ஏன் உன்னாலையோ அவளாலையோ புரிஞ்சு கொள்ள முடியேலை? அவளை கண்டதும்.. என் சந்தேகங்களை அவளிட்டை கொட்டிட்டன். அவளும் ஓடிட்டாள்.. நீயும் இப்ப என்னை திட்டுறாய்.. எனக்கு விளங்கேலை.. எதுக்காக அவள் வயதை மறைக்கணும்.. போட்டோவை காட்டாமை ஒரு நாள் அனுப்புறேன்னு தவணை சொல்லணும்.. எனக்கு ஒண்டும் புரியேலை ஜோதி.."

என் உள்ளத்து உணர்வுகளை அவளிடம் கொட்டினேன்.

"ஐயோ.. தரன்! உனக்கு எவ்வளவுதூரம் சொல்லுறது? நீ நினைக்கிறமாதிரி அவள் இல்லைடா.. நீ விரும்புற இடத்திலை அவள் இல்லைடா.. கற்பனைல யதார்த்தத்தை மறக்காதை.. சரி.. அவளும் உன்னை விரும்புறாள் என்று வை.. அவள் நீ எதிர்பார்க்கிறமாதி வடிவா இல்லாட்டி..?"

"வடிவு என்ன பெரிய வடிவு.. குணம்தான் முக்கியம்.."

"லொள்.. இப்ப சொல்லுவாய்.. பழகப் பழகத்தான் எல்லாம் விளங்கும்.. தூரத்திலை இருந்து பாக்க எல்லாம் அழகாய்த்தான் இருக்கும்.. கிட்ட போனால்தான் அதிலுள்ள குறை நிறையள்.. ஓட்டை ஒடிசல்கள் தெரியும்.. சரி.. அதுதான் போகுதெண்டா.. எங்கடை சமூகம்டா.. சாதி சமயம் எண்டு பல தடையள்.. உன்ரை அப்பா அம்மா.. அவளின்ரை பெற்றோர்.. இப்படி எவளவோ பிரச்சினையள்.. இதையெல்லாம் யோசிக்காமை காதல் கீதல் என்று உன்னை நீயே ஏமாத்திக் கொள்ளாதை.."

"என்ரை வாழ்க்கையை நான்தான் வாழப்போறன்.. அவங்களில்லை.. ஊரிலைதான் அவங்கடை சொத்து சுகம் என்று தாய் தகப்பனிலை பிள்ளைகள் தங்கி இருக்கிறாங்கள்.. இங்கை அப்பிடி இல்லை.. குழந்தை பிறக்க காசு.. குழந்தை வளர காசு எண்டு பிள்ளைகளின்ரை காசிலதான் பெற்றோர் தங்கி இருக்கினம்.. எங்கடை வாழ்க்கையை நாங்கள் வாழ ஆரும் தடை போடேலாது.."

எனக்குத் தென்பட்டதை அவளிடம் சொன்னேன்.

"லொள்.. ஐயோ.. என்ன இருந்தாலும் பெற்றவங்க பிள்ளைகளின் நல்லதுக்காகத்தான் வாழுறாங்க.. அவங்களை மதிக்காமல் வாழுற வாழ்வு வெற்றியடையாதுடா.. அவங்களுக்கு வாழ்க்கையிலை எத்தனையோ அனுபவங்கள் இருக்கு.. வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அனுபவிச்சு உணர்ந்தவர்கள்.. அந்த அனுபவத்தால பிள்ளைகளின் வாழ்வாவது நிம்மதியாக அமையவேணும் எண்டுதான் எல்லாரும் விரும்புவாங்க.."

"என்னவோ.. ஒரு உதவி செய்.. முடிஞ்சால் பிருந்தாவை ஓன்லைன் வரச் சொல்லு.."

"ஐயோ.. வெண்ணை.. வெண்ணை.. அவள்தான் என்னோடை பேசமாட்டேன் எண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சூட்டாளே.. உனக்கு எத்தனை தரம்டா சொல்லுறது.. காதல் கீதல்னு வாழ்க்கையை சற்றில பாழாக்காதை.. அவள் உன்னைப்போலை சற் பைத்தியம்தாண்டா.. வருவாள்.. இப்ப அவளுக்க அதுதான் உலகம்.. என்னவோ.. ரண்டு மொக்குகளும் என்னவோ செய்யுங்கோ..நான் இதுக்கை வரலை.."

"ம்.. நீ உன்ரை மச்சாள் என்றுதானே காதலிக்க வேண்டாமெண்டுறாய்?"

மனதில் இருந்ததை எழுத்துக்களாக்கி அவள்முன்னால் போட்டேன்.

"என்ன.. என்ன விசர்க்கதை... ஏதோ காணாததைக் கண்டவன்மாதிரி.. ஏன்டா காதல் கீதல்னு வாழ்க்கையை நாசம் பண்ணுறாய்.. ஒருத்தி சற்றில வந்து கதைச்சால்.. ஆர் என்ன ஏதெண்டு தெரியாமை காதலா.. உப்பிடித்தான் சற் ரூமுக்கு வாறவங்கள்ல கனபேர்.. ஆராலும் ஏமாந்தவள் கிடைச்சால்.. தலையிலை மிளகாய் அரைக்கவெண்டே திரியுறாங்கள்.."

பொரிந்துதள்ளினாள்.

தன்மானம் சூடேற்றியது.

'என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்? காணததை கண்டா காதல் ஏற்பட்டது? காதலிக்க ஒருவருமே இல்லாமலா அவளை காதலித்தேன்?!'

நிதானம் இழந்தேன்.

"போதும் ஜோதி.. என் உணர்வுகளை உன்னாலை புரிஞ்சு கொள்ள முடியாது.. கனடாலதான் அழகான பெண்கள் இருக்கிறாங்களெண்டு நினையாதை.. ஜேர்மனிலை எத்தனையோ அழகான குணமான பெண்கள் இருக்கிறாங்கள்.. ஏன்.. என் மச்சாள் எனக்காகக் காத்திருக்கிறாள்.. நான் ஓம் எண்டால் அவள் என்னைக் கலியாணம் கட்ட றெடி.. ஆனால்.. எப்பிடி சொல்லுறது.. உனக்கு எப்பிடி விளங்க வைக்கிறது.. அவங்களிட்ட இல்லாத ஒன்று பிருந்தாட்ட இருக்கு.. அதுதான் என் காதல்.. அதை கேவலப்படுத்தாதை.."

"ம்.. இப்ப உனக்கு என்ன சொன்னாலும் விளங்காது.. பரவாயில்லை.. நீ ஆச்சு.. அவள் ஆச்சு.. இனி நான் உன்னோட பேசமாட்டன்.. என்னாலை சகிக்க முடியாது.. ப்ளீஸ்டா.. என்ரை மெசன்சர் 'ஐடி'யை அழிச்சுடு.. சொல்லிப்போட்டன்.."

"ஜோதி... உண்மையை சொன்னால் ஏன் கோபப்படுறீங்கள்?"

"கோபம் இல்லைடா.. இனி உன்னோடை பேசினால் எனக்குத்தான் மனக் கஸ்டம்.. எல்லாத்தையும் சீரியஸா எடுக்கிறாய்.. என்னவோ.. கடவுள்தான்டா உனக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.. பாய் பாய்.."

அவள் போய்விட்டாள். 'இனி என் மெசன்சருக்கு வரமாட்டாள்' என்ற வெறுமையான உணர்வுடன் கதிரையில் சாய்ந்து முகட்டை வெறித்தேன்.

ஒவ்வொன்றாகக் கையைவிட்டு போவது போன்ற பிரமை.
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!