வெள்ளி, 3 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 9

திடீரென விழிப்பு வந்தது.

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை இரண்டு மணி.

எங்கும் மயான அமைதி.. என் மனதைத் தவிர.

ஒரு கிழமையாக என் பிருந்தாவுடன் பேசவில்லை. ஒரு யுகம்போலிருந்தது. கணனியைத் தொட்டால்தானே பேசுவதற்கு?!

தண்ணீரில் முதன்முதலா குதிக்கும்போதுதானே குளிருமோ என்ற பயம்? இப்போதான் பிருந்தாவுக்கும் நான் 'சற்'பண்ணுற விடயம் தெரிந்துவிட்டதே.

ஓரளவு துணிவு பிறந்தது.. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கென்றமாதிரி.

கணனியைத் தொடுவதற்கக் கை துருதுருத்தது.

'தொடுவோமா?'

'என் பிருந்தா ஓன்லைனில் இருப்பாளா?!'

ஆவல் அடக்கம்விடுத்து எழுந்தாடியது.

வீட்டினுள்ளே நோட்டமிட்டேன்.

எல்லோரும் அமைதியாக உறக்கத்தில். நான்மட்டும் உறங்காத விழிகளுடன் பிருந்தாவைக் காணாத ஏக்கத்தில்..!

கணனியை அழுத்தினேன்.

யன்னல் 'மைக்ரொசொவ்'ரை அடையாளம் காட்டி வழிவிட்டது.

மெசன்சரை அழுத்தினேன்.

அதிலே ஒரேயொரு பெயர்மட்டும் பச்சைப் பொம்மையாய் வர்ணம் காட்டியது.

சுதா..!

அவளுடன் பேசும் மனநிலையில் நான் இல்லை.

ஜேர்மனியில் அதிகாலை இரண்டு மணி என்றால் கனடாவில் இரவு எட்டு மணி இருக்கும்.

பிருந்தா எங்கே? படிக்கிறாளோ? அல்லது கடந்த ஒரு வாரகாலமாக காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றத்தால் சலிப்படைந்து மெசன்சர் பக்கமே எட்டிப் பார்க்காமல் உள்ளாளோ?

மெயில் பெட்டி சமிக்ஞை காட்டியது.

'எலி' அங்கே விரைந்து சென்று அழுத்த... அங்கே ஒரு மெயில்.

ஓ.. என் பிருந்தாக்குட்டியின் மெயில்தான்.

ஆகா.. மனதில் குதூகலம் வெண்பனி மழையாய் 'சோ'வெனக் கொட்டியது.

'ஹீ தரன்.. எப்டி சுகம்டா.. நான் நல்லாருக்கேன்டா.. மச்சாள் வந்திட்டாளா.. கியூற்றா? அதான் என்னை மிஸ் பண்ணிட்டியா.. அவள்கூட சுத்துறியா? அவளுக்கு 'ஜஸ்' வைக்றியாடா.. அவளை 'லவ்'பண்றியா? என்னை மறந்துட்டியாடா.. எனக்கு பொழுது போகலடா.. எல்லாரும் சும்மா 'போர்'டா.. ஒரு மெயில்கூட போடக்கூடாதா? மச்சாளைக் கண்டதும் என்னை மறந்துட்டியாடா.. எம்மெம்.. நீ மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்டா.. ஏன் தெரியுமா.. நீதான் என்ர பெஸ்ற் பிரண்ட்.. லொள்.. பாய் பாய்டா.. யுவர் டியரஸ்ற் பிருந்தா..'

சோர்ட் அண்ட் சுவீற்றாய் ஒரு மெயில்.

இது குறும்பா கோபமா.. குழப்பமாக இருந்தது.

எனினும் ஒரு பூரிப்பு.

'நீதான் என்ர பெஸ்ற் பிரண்ட்..'

திரும்பத் திரும்ப வாசிக்கத் தோன்றியது.

அந்த நாலு சொற்களில் நாலாயிரம் கற்பனைப் பூக்கள் களமிறங்கி.. சரசமாடி சரமாகி அவள் கழுத்தை நாடி மணப்பெண்ணாக்க.. நான் மாப்பிள்ளைக் கோலத்தில்!

அந்த இனிய கனவின் சுகமான ராகத்தின் புளகாங்கிதத்தில் பதில் எழுத ஆரம்பித்தேன்.

'என் மனதில் குடிகொண்டவளே! உன்னை மறந்தால்தானேடா நினைப்பதற்கு... துளித்துளியாய் உன் அன்பை உருக்கி என்னை நனைக்கும் என் ஐஸ்கிறீம் சிலையே! உன்னில் உருகி வழியும் அன்புத் துளிகள் என் இதயத்தில் பட்டுத் தெறித்து 'டிக், டிக்' என ஒலி எழுப்புவதை அறிவாயா? அந்த ஒலியில்தானே நான் மூச்சுவிடுகிறேன்?! உன் மெயில் கண்டதும் தமிழ்கூடத் தன்னை அழகுபடுத்த விரும்புகிறது.. உனக்குத்தான் விளங்குமோ தெரியேல்லைடா.. என்னவோ.. என்னை விளங்கிக்கொள்ளடா என் செல்லமே... என் நினைவுகளில் தித்திப்பவளே! நான் உன் அருகில்தானே இருக்கிறேன்.. அதனால்தானோ என்னவோ.. ஏனையவை உன் அழகுக்கு முன்னால் மங்கலாகத்தான் மிளிர்கின்றன.. என் மச்சாளும்தான்.. அன்புடன் தரன்.'

மெயில் என் உணர்வுகளின் அடையாளத்தை அள்ளிச் சென்றது.

சுதா இன்னும் 'ஓன்லைனி'ல்தான்..

அவளது பெயரை அழுத்த, மெசன்சர் யன்னல் கணனித்திரையில் விரிந்தது.

"ஏய் சுதா!"

"என்னடா அண்ணா.. எங்கடா போனாய்? ஒரு கிழமையா காணலை.."

"ம்.. அதுவா.. 'விசிட்டர்ஸ்' தொல்லைடா.."

"ஓ.. மச்சாள் தொல்லையா.."

"உனக்கு எப்படி தெரியும்.."

"ஐஸ்தான் சொன்னாள்.. நீ அவளை கலியாணம் கட்டப் போறியாமே?"

"ஐயோ.. மொக்கு.. அப்பிடி சொன்னாளா.. நானாவது அவளை கட்டுறதாவது.. எரிச்சலை கிளப்பாதை.."

"லொள்.."

"ஐஸை எப்போ பார்த்தே.. இன்னிக்கு வந்தாளா?"

"ஓ.. அவளைக் கேட்கத்தான் என்னைக் கூப்பிட்டியா.. போடா.. சொல்லமாட்டேன்.."

"ப்ளீஸ்டி.. என் தங்கச்சிதானேடி.."

"ம்.. என்ன எனக்கு ஐஸா? போடா.."

"ப்ளீஸ்டி குட்டி.. என் தங்கச்சிக்குட்டி.. சொல்லடி.."

"முதல்ல நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு.. பிறகு யோசிப்போம்.."

"ஐயோ.."

"என்ன ஐயோ.. பதில்.. பதில்.."

"சரி.. கேட்டுத் தொலை.."

"நீ ஐஸை 'லவ்'பண்றியா?"

"ஐயோ.."

"எப்ப பார்த்தாலும் ஐயோதானா.. அவளைக் காதலிக்கிறியா.. பதில்.. பதில்.."

"ஏன் கேட்கிறாய்?"

"ஒருத்தன் என்னோட அழுறான்டா அண்ணா.. நீ அவளை காதலிக்கிறியாம்.. தன்னோட அவள் சரியா முந்திமாதிரி பேசுறதில்லையாம்.."

"யார்..?"

"என்ர செல்ல தம்பி.. லவ்லிபோய்.."

"அவனா.. இந்தியால இருந்தா..?"

"அவன் ஒருநாளைக்கு ஒரு நாடு சொல்லுவான்டா.. லவ்லிபோய் அவன்ர நிக்.. ஐஸ் சொல்லலையா?"

"சொன்னவள்.. தன்னை காதல் என்று தொந்தரவு செய்யுறதாய் சொன்னவள்.."

"லொள்.. அவன் சொல்லுறது உண்மையா.. நீ அவளை 'லவ்'பண்ணுறியா?"

"ம்.. நான் அவளை 'லவ்'பண்ணுறேன்.."

"ஐயோ.. பாவம் லவ்லிபோய்டா.."

"ஐயோ.. அவன் என்ரை வில்லன்.."

"அப்பிடி சொல்லாதைடா.. என்ர செல்ல தம்பி.. ஓன் லைன்ல இருக்கான்.. 'அட்' பண்ணவா..?"

"றியலி...? 'அட்' பண்ணு.. அவளை தொந்தரவு செய்யாதைடா என்று சொல்லணும்.."

"லொள்.."

லவ்லிபோய் மெசன்சர் யன்னலுள் புகுந்தான்.

"ஹலோ அண்ணா.. "

"அண்ணாவா..?"

"இருபததாறு வயசெண்டா அண்ணாதானே.. எனக்கு இருபத்தி ரண்டு.."

"மச்சான் என்று சொல்லு.."

"ஏன் அண்ணா?"

"ஐஸுக்கு அண்ணன் எனக்கு மச்சான்தானே?"

"லொள்.." - சுதா சிரிப்பு அடையாளம் காட்டினாள்.

"முடியாதுடா.. ப்ளீஸ்டா.. அவளை விட்டுடடா.. அவளை நான் காதலிக்கிறேன்டா அண்ணா.. அவளின் வயது எனக்குத்தான்டா பொருத்தம்.. உனக்கு வயது கூடடா.."

நான் கோபத்தின் உச்சிக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!