வெள்ளி, 24 மே, 2013

வாசம் இழந்த மலர்கள்

செந்தணலாக ஜொலித்துச் சிவந்திருந்தது மாலைநேரத்து வானம். சூரியனின் அஸ்தமனத்தின் முன்னே தினமும் வானத்தில் நிகழும் போராட்டத்தால் பீறிட்டெழும் செந்தணல் ஒளிக்கீற்றுக்கள் வரிவரியாக முகில் கூட்டங்களில் பட்டுத் தெறிக்கும் காட்சி அது.

நாளை சூரியன் மீண்டும் உதிப்பான். மீண்டும் மறைவான். அப்போது வானம் மீண்டும் இரத்தச் சிவப்பாகிக் களரியாகும். இதேபோல் தாயகத்தில் எத்தனையோ உயிர்கள் விடுதலைத் தீயில் மரணிக்கின்றன. அவற்றின் மறைவு தமிழ் மண்ணை இரத்தத்தால் நனைக்கும். அந்த இரத்தப் பதிவுகள் காயும் முன்னே பல்லாயிரம் மக்கள் விடுதலை வேள்விக்காய்த் தோற்றமாவார்கள்.

இந்த நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. கண் முன்னே நீண்டு விரியும் தியாகப் பரிமாற்றங்கள். எனினும் தோற்றங்களினால் ஏற்படும் இறுமாப்புடனான பூரிப்புகள், இழப்புகளின் தாக்கத்தில் தள்ளாடும் அவலத்தை மாதவனால் தவிர்க்க முடியவில்லை.

10.07.1995 காலை நேரம்.

முதல்நாள் இரவு 'றெஸ்ரோரண்ட்' அடுப்படி ஒன்றில் சட்டி பானைகளுடன் வேலை என்ற பெயரில் போராடிக் களைத்துப் போனவனாய் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவனைத் தொலைபேசியின் அலறல் துயில் கலைய வைத்தது.

மாதவனால் கண்களைத் திறக்க முடியவில்லை. எரிந்தன. கை மூட்டுக்கள் இரண்டும் வலித்தன. 'றெஸ்ரோரண்ட்'டில் மணித்தியாலம் பன்ரெண்டு மார்க் - நல்ல சம்பளம்  என்ற பெயர்.  ஆனால்  ஒரு  நிமிசம்  கூடக் களைப்பாற முடியாதவாறு வரிசையாக வந்து குவியும் எச்சில் கோப்பைகள், 'பிளாஸ்ரிக்' வாளிகள், சட்டிகள், அண்டாக்கள் என்று அவனது மனிதவலு அவைகளால் உறிஞ்சப்படும்போது, 'இப்படி ஒரு வேலை தேவைதானா?' என்ற வெறுப்பு மேலோங்கும்.

வேலையைச் சுலபமாகத் தூக்கி எறிந்துவிடலாம். அதனால் முதலாளிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அந்த வேலைக்குப் போட்டிபோட எத்தனையோ மூன்றாம் உலக நாட்டவர்கள் வரிசையில் முண்டியடிப்பார்கள்.

இந்த வேலை போனால், அவனை நம்பித் தாயகத்தில் ஏற்படும் தேவைகளை மாதம் ஒருதடவையாவது வரையும் கடிதத்தில் அதிகரித்துக்கொண்டே போகும் குடும்பத்தினரை நினைக்கையிலே, அவனது களைப்பும் அலுப்பும் வில்லங்கமாக விலகி நிற்கும்.

யுத்தம் என்று ஒன்று ஏற்படும்போது அழிவுகளும் இழப்புக்களும் தவிர்க்க முடியாதவை என நன்கு தெரிந்தும், பிறந்த மண்ணில் வாழ்ந்தே தீருவோம் என்று உறுதியுடன் வாழும் குடும்பத்தினரின் அற்பசொற்பத் தேவைகளைக்கூட நிறைவேற்றாதுபோனால், பிறந்ததில் என்ன அர்த்தம் உண்டு எனும் வினாவின் விடையால் தன் உடலை உழைப்பாக்கினான் மாதவன்.

தொலைபேசி ஓயாது அலறியது.

"ஹலோ..."

"மாதவன்.... நான் நாதன் கதைக்கிறன். 'ரீவி' பாத்தனியே?"

"ஏன்.... என்ன விசயம்?"

"பத்தாயிரம் ஆமி குடாநாட்டிலை இறங்கி இருக்காம். அங்கை சரியான சண்டை நடக்குதாம். கொழும்புக்கு ரெலிபோன் எடுத்தனான். உண்மை நிலவரம் அறிய முடியேலை" என்று மறுமுனையில் படபடத்தான் நாதன்.

மாதவனுக்குத் தலைசுற்றியது. உற்றம் சுற்றம் கண்முன்னே வந்தனர்.

பத்தாயிரம் ஆமி! பத்தாயிரம் ஆமி!! தமிழனை அழித்து அதிகாரவெறியை இரத்தத்தால் தீர்க்கவெனப் பத்தாயிரம் ஆமி!!!

உள்ளம் குமுறியது. உடல் பதறியது. தொலைபேசியை வைத்துவிட்டு 'ரீவி'யைப் போட்டான். செய்தியைக் காணவில்லை. தனக்குத் தெரிந்த தகவல் நிலையங்களுடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டான். தகுந்த விபரம் இல்லை.

மனம் நிம்மதியை இழந்துவிட்டது. எதையுமே அறிய முடியாத கையாலாகாத நிலை.

பிஞ்சுக் குழந்தைகள்: நிறைமாதக் கர்ப்பிணிகள்: தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள் - இப்படியான மக்கள் கூட்டம் துப்பாக்கி ரவைகளுக்காலும் 'செல்' தாக்குதல்களுக்காலும் எவ்வாறு தமது உயிர்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கால் வலிக்க எவ்வளவு தூரம் செல்வார்கள்? பசியால் கதறும் பாலகர்களை என்ன சொல்லிச் சமாளிப்பார்கள்?

பற்பல எண்ணங்கள் மனதைத் தாக்கின. சற்று நேரம் சிந்திக்கும் திறன் மழுங்கிவிட்டது. மூளை மரத்தாற்போன்ற உணர்வு. அதனால் உடல் சிலையான பிரமை. இருந்த இடத்தைவிட்டு அசைய முடியவில்லை. அசையாமல் அப்படியே இருந்தால் போதும்போலவும் இருந்தது.

கடிகாரம் வேலைக்கு நேரமானதை அறிவித்தது.

'வேலை செய்ய ஏலாது. எதையும் இப்ப செய்யேலாது. இப்பிடியே நீட்டி நிமிர்ந்து படுத்தால் போதும். வேலையாம் வேலை. அங்கை ஊரிலை ஆர் ஆர் என்னபாடுபடூதுகளோ தெரியேலை. உயிரைக் கையிலை பிடிச்சுக்கொண்டு எங்கை அலையுதுகளோ தெரியேலை. இந்த நேரத்திலை கண்டறியாத வேலை' என்று தனக்குள் புலம்பினான்.

  'சென்றதினி மீளாது மூடரே! நீர்
    எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
  கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து
    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்' என்ற பாரதியின் கவிதை வரிகள் நினைவில் எதையோ அச்சுறுத்தியது.

இனிமேல்தான் தாயகத்தின் தேவைகள் அதிகமாகும். அவற்றிற்கான பங்களிப்புக்கு வேலை அவசியம் என்ற தெளிவு தோன்ற, வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் மாதவன்.

வேலை முடிந்தவுடன் நாதனின் வீட்டிற்குச் சென்றான் மாதவன். அங்கு நாதனின் சகோதரனான ஜீவனும் தனது குடும்பத்துடன் வந்திருந்தான்.

நாதனின் குழந்தைகள் தூக்கக் கலக்கத்துடன் 'ரீவி' பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எல்லோரது முகங்களிலும் ஒருவித சோகம் குடியிருந்தது.

"என்ன இந்த நேரத்திலை..." என்றவாறு மாதவனை வரவேற்றான் நாதன்.

"ஏதாலும் புதினம் அறிஞ்சனீங்களோ எண்டு கேட்க வந்தனான். அறைக்குப் போகவும் மனம் கேக்கேலை."

"லண்டன் 'சன்றைஸ் றேடியோ'விலை முந்நூறுக்கும்மேலை சனங்கள்தான் செத்திருக்கெண்டு சொன்னாங்கள். அதிலையும் குழந்தையளும் பொம்பிளையளும்தான் எக்கச்சக்கமாம்.... கோவிலிலையும் பள்ளிக்கூடத்திலையும் போயிருங்கோ எண்டு நோட்டீசு போட்டூட்டு அதுகளுக்குத்தான் அடிச்சிருக்கிறாங்கள்...."

"அப்பா அம்மாவை.... ரண்டு தங்கச்சியளின்ரை குடும்பங்கள் என்ன பாடுபடூதுகளோ தெரியேலை" என்று கவலையுடன் கூறினான் ஜீவன்.

"ஊதுகளுக்காலை அதுகள் தப்பி வந்தால், இனி கொழும்பிலை வீடு ஒண்டை எடுத்து எல்லாரையும் கூப்பிடவேணும். பாவம் அதுகள். காசைப் பாக்காமல் கொழும்பிலையாலும் குடியிருத்த வேணும்" என்று கூறினான் நாதன்.

'கொழும்புமட்டும் பாதுகாப்பே?' என்று கேட்க நினைத்த மாதவன் நாவை அடக்கிக்கொண்டான்.

'கொழும்பு வந்தால் என்ன.... வேறு நாட்டிற்குப் புலம்பெயர்ந்தால் என்ன.... தமிழனுக்கென ஒரு நாடு இல்லாதவரையில் தமிழனின் வாழ்வு நிம்மதி இல்லாததுதான். எனினும் இவர்கள் தாயகத்திலுள்ள பெற்றோர்கள், சகோதரங்கள் என்ற உறவுகளுக்காய் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும் என முனைவது நல்ல செயல்தான்' என்ற எண்ணத்தில் கேட்க நினைத்த கேள்வியை மனதுள் புதைத்துக்கொண்டான்.

'இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தன் இனத்திற்காகத் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என விழைந்தால், தாயகம் போராட்டத்தாலே துவண்டுவிடாது. அது வாழும். விடுதலைத் தீயில் புடம்போட்ட தங்கமாக ஜொலிக்கும். அந்த ஒளி எல்லாத் தமிழனையும் அணைக்கும்' என்ற நினைவே இனித்தது.

நாட்கள் நிம்மதியற்று நகர்ந்தன. உறக்கம் தினமும் தூர விலகிநின்று வேடிக்கை காட்டியது. சஞ்சலம் அடைந்த மனம் ஆதரவிற்காய் இறைவனிடம் மன்றாடியது. தாய்நாட்டின் உறவுகளுக்காக, மக்களுக்காக வேண்டி நின்றது.

'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?சர்வேசா! இப்பயிரைக்
  கண்ணீராற் காத்தோம்: கருகத் திருவுளமோ?"
-(பாரதியார்)

எதற்கும் ஒரு முடிவு.... ஆம்: இனத்தை அழிக்கவென வந்த வெறிபிடித்த படைகளின் பின்நோக்கிய பாய்ச்சலில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்ட செய்தி கேட்டு நிம்மதியடைந்தான் மாதவன். உறவுகளின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற தகவலால் புத்துணர்ச்சி பெற்றான்.

நாதனைப்பற்றிய எண்ணம் எழுந்தது. அவனது பெற்றோர்கள், சகோதரிகளின் குடும்ப நிலவரம் அறியத் தொலைபேசியைச் சுழற்றினான்.

மறுமுனையில் நாதன்தான் பேசினான்.

"எல்லாம் கடவுள் செயல். எல்லாரும் சுகமாய் இருக்கினம். யாழ்ப்பாணத்திலை வந்து நிண்டவையாம். இப்ப ஊருக்குப் போவிட்டினம்."

"ரொம்பச் சந்தோசம் நாதன். அப்ப இனி எல்லாரையும் கொழும்புக்குக் கூப்பிடப்போறியே?"

"அதிலை ஒரு சிக்கல் மாதவன்.... கொழும்பிலை வீட்டு வாடை எக்கச்சக்கம்.... இனி அதுகளுக்குச் சாப்பாடு துணிமணி எண்டு கனக்க முடியும். அதோடை தங்கச்சிமாற்றை பிள்ளையளையும் சும்மா வைச்சிருக்க முடியாது. அதுகளின்ரை படிப்புக்கும் செலவழிக்க வேணும்.... இதெல்லாம் முடியுற காரியமே? அதுகளுக்கு ஊரிலை சண்டை எல்லாம் பழகிப்போச்சு. அவைக்கு இதுகள் தூசுமாதிரி...." என்று விலாங்காக வழுக்கிய நாதனின் சொற்கள் வாசம் இழந்த மலர்களாக மாதவனின் செவிப்பாறையில் பட்டுத் தெறித்தன.

சே.... என்ன மனிதர்கள்?!

சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் தங்களது சுயநலன்களுக்காகக் காரணங்களை உருவாக்கும் பச்சோந்திகள். நினைக்கவே வெறுப்பாக இருந்தது.

யாரங்கே! கூப்பிடுங்கள் பாரதியை!!

'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?'


(இச் சிறுகதை 'தமிழருவி" பத்திரிகை நடாத்திய
சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. 1995)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!