திங்கள், 27 மே, 2013

நாளைக்காக இன்றா?!

ன்னால் நம்ப முடியவில்லை. இந்த ஐரோப்பிய மண்ணில் இப்படியானதொரு நிகழ்வு இடம்பெறுமா? - என்பதை இற்றைவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை. அதனால்தான் என்னால் நம்பமுடியவில்லை.

'நீ நம்பித்தான் ஆகவேண்டும். எங்களை ஒருமுறை உற்றுப் பார். எவ்வளவோ கனவுகளுடனும் எதிர்காலத் திட்டங்களுடனும் ஜேர்மனியை மிதித்தோம்....
அவைகள் எல்லாம் அரைகுறைகளாக அரங்கேறியவேளையில், தட்டிக்கொட்டிச் சிதைத்த பாவிகளின் வன்முறைகளுக்கு இரையாகிப்போய்க் கிடக்கிற எங்களைப் பார்த்தாவது நம்பித்தானாக வேண்டும்....' என்பதுபோல அந்தப் பெட்டிகளுள் மார்பளவு வெள்ளைத்துணிகளைப் போர்த்தியவாறு அவனும் அவளும்... அல்ல... அல்ல... அந்தப் பிணங்கள் சலனமில்லாமல் ஊதுபத்தி நாற்றத்துள் கிடந்தன.

தலைப்பக்கத்தின் அருகே ஒரு விளக்கு காற்றில் சுடரை அலைபாயவிட்டிருந்தது.

அந்த அவனும் அவளும் ஒரு இளம் தம்பதிகள். இரு சிறு பிள்ளைகளின் பெற்றோர். இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள். ஒரே நகரத்தில் வசிப்பதால் எனக்கு ஓரளவு அறிமுகமானவர்கள். ஓரிருமுறை அந்த இரண்டு சிறு பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்கு அழைப்புக் கிடைத்து வந்திருக்கிறேன்.

ஆனால் இன்று.... அவர்கள் யாரோ கொடியவர்களால் கொலை செய்யப்பட்டதை அறிந்து அழையாமல் வந்திருக்கிறேன்.

பிள்ளைகள் இரண்டும் பாடசாலைக்குச் சென்றவேளையில் யாரோ சிலர் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம்.

துப்பாக்கிச் சத்தம்கேட்டு அயல்வீட்டுச் சனங்கள் ஓடிவரும்போது கொலைகாரர்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் கொலைகாரர் இலங்கையர்தான் என அவர்கள் உறுதியாகச் சொன்னபோது வெட்கமாக மட்டுமல்ல - ஆவேசமாகவும் இருந்தது.

தாய் நாட்டின் துப்பாக்கிகளுக்குப் பயந்து அகதிகளாக வந்தவர்கள், துப்பாக்கி ஏந்தித் தம் இனத்தையே குறிவைத்ததை நினைக்க, நினைக்க - 'நானும் ஏன் துப்பாக்கி எடுத்து இவர்களை இனங்கண்டு சல்லடைகளாக்கக் கூடாது?' என்ற கேள்வி மனதுள் எழுந்து, என்னையும் ஆயுதங்கள்பக்கம் சிந்திக்கத் தூண்டியது.

அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகள் இரண்டும் சோர்வாக ஒரு கதிரையில் அமர்ந்திருக்கின்றன. பெற்றோர் இறந்ததை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமா? புரிந்திருந்தால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

மூத்தவனுக்கு எட்டு வயதுதான் இருக்கும். இளையவளுக்கு இரண்டு வயது குறையக் கணிக்கலாம்.

நான் காலையில் இருந்து அங்கே நிற்கிறேன். பெண்கள், ஆண்கள் என வந்து அவர்களிடம் ஏதோ பேசுகிறார்கள். சோகத்துடன் பார்க்கிறார்கள். சோகமாகக் காட்டுகிறார்கள். சோகமாகக் காட்டுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

அந்தப் பிஞ்சுகள் அழவில்லை. ஆனால் கண்களில் கலக்கம். தலை கலைந்திருந்தது. உடைகள் கசங்கியிருந்தன. விடிய வெள்ளண்ணப் படுக்கையால் எழுப்பி, உச்சிமோர்ந்து, தலைவாரி உடைகள்மாற்றி அழகு பார்த்து உணவூட்டிப் பாடசாலைக்கு வழியனுப்பும் அம்மா உயிரற்ற உடலாகப் பெட்டிக்குள் கிடக்கிறாள்.

குழப்படி செய்யாமல் இருந்தால் 'சொக்லாட' தருவேன் என்று கூறிக் குழப்படி செய்தாலும் வாரியணைத்து இனிப்புகள் வழங்கும் அப்பாவும் பிணமாக அங்கே.

அந்தப் பிஞ்சுகளின் அன்புக் கூட்டைப் பிய்த்தெறிந்து, அவர்களை நிர்க்கதியாக்கிய பிணந்தின்னிக் கழுகுகளை நினைக்கும்போது இரத்தம் கொதித்தது.

அங்கு வருவோர் போவோரெல்லாம் துக்கம் விசாரிப்பதும், புதினம் சேகரிப்பதுமாக நடமாடினார்களேயொழிய - அந்தச் சின்னஞ்சிறிசுகள் சாப்பிட்டார்களா என்று கவனிப்பதாகத் தெரியவில்லை.

அங்கே ஒரு வயதான பெரியவர் மும்முரமாக ஓடியாடிக் கொண்டிருந்தார்.

"ஐயா!"

'என்ன' என்பதுபோலப் பார்த்தார்.

"பாவம் குழந்தையள். என்னவாலும் சாப்பிட்டுதுகளோ தெரியேலை..."

சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதைப்போல ஏளனமாக என்னைப் பார்த்தார்.

"தாய் தேப்பன் கண்ணுக்கு முன்னாலை கிடக்கேக்கை அதுகளுக்கு எப்படிச் சாப்பாடு கொடுக்கிறது? இன்னும் கொஞ்சத்தாலை புதைக்கப்போறம். பேந்து பாக்கலாம். இப்ப பேப்பர்காரங்கள் வாறன் எண்டவங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கு."

என்னைக் கடந்து சென்றார்.

இளையவள் தமையனிடம் என்னவோ கேட்கிறாள். அவன் கலக்கத்துடன் அங்குமிங்கும் பார்த்து மலங்க மலங்க விழிக்கிறான்.

'தமையனிடம் பசிக்கிறது என்று கூறியிருப்பாளோ?!'

மெதுவாக அவ்விடத்தைவிட்டு வெளியே வந்து 'சிகரட்' ஒன்றை எடுத்து வாயில் வைத்தேன்.

என்னைப்போல நாலைந்து தமிழர்கள் 'சிகரட்'டை வாயில் வைத்தவாறு கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கென்னவோ இது எங்கடையாக்கள் செய்தமாதிரித் தெரியேலை. நாசியளாய்த்தான் இருக்கவேணும். அவங்கள்தான் இப்ப மும்முரமாய் வெளிநாட்டாக்களைத் தாக்குறாங்கள். ஜேர்மன்காரர் சுத்துறாங்கள்!"

"இல்லை குமார். நான் அறிஞ்சமட்டிலை இவர் ஊரிலை இயக்கம் ஒண்டிலை இருந்துகொண்டு கசிப்புக் காச்சினவங்களைப் பிடிச்சு கம்பங்களிலை சுட்டுத் தூக்கினவராம்.  பாதிக்கப்பட்டவங்கள் ஆரோதான் இப்பிடிச் செய்திருக்கவேணும்...."

இருக்கலாம்.... அதற்காக ஒரே சூட்டால் ஆளை முடித்தால் மாத்திரம் கம்பங்களில் தொங்கியவர்கள் எல்லாம் புது அவதாரம் எடுத்துவிடுவார்களா என்ன?! அவர் செய்த பாவத்திற்காக அந்தப் பிஞ்சுகள் இரண்டையும் அந்நிய மண்ணில் அநாதைகளாக்கிய செயலை எந்த நியாயத்தில் சேர்க்க முடியும்?!

அவர்களின் உரையாடலை மீண்டும் காது கொடுத்துக் கேட்டேன்.

"அப்பிடியில்லை. இவையிட்டை எக்கச்சக்கமான பேர் வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கினம். காசைத் திருப்பிக் கொடுக்க வேணுமெண்டதுக்காக ஆக்களை முடிச்சுப்போட்டாங்கள்."

அங்கு நடந்த கொலைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறிப் பொழுதைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நேரத்தில் எல்லோரும் சேர்ந்து, நாசிகள்தான் இதைச் செய்தார்கள் என்று தீர்மானம் எடுத்து ஊர்வலமாகி எவராவது ஒரு பிரமுகரை அழைத்துப் பேசச் செய்யலாம். அவரும் 'மைக்'கைப் பிடித்து, நாசிகளை எதிர்த்துப் போராடி உயிர்நீத்து வீரத் தமிழர் என்று நிரூபித்து எம்மினத்திற்குப் பெருமை சேர்த்துவிட்டார்கள் எனப் பேசிவிட்டுப் போகலாம்.

அந்தப் பிஞ்சுகள் இன்னும் பட்டினியுடன் அந்தக் கதிரையில் சோர்ந்து போனவர்களாய் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் பேப்பரும் பேனாவுமாக வருகிறார்.

"இந்தக் குடும்பத்துக்காக நிதி சேர்க்கிறம். உங்கடை பங்களிப்பைக் கொடுங்கள்..."

தற்கால வாழ்வுக்கு நிதி அவசியம்தான். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைக்கு நிதி அவசியம்தான்.

தாய் நாட்டில் அல்லலுறும் அநாதைச் சிறுவர்களுக்காக எத்தனையோ மாமனிதர்கள் நிதி சேகரிக்கிறார்கள்.

அதேபோல் அந்தப் பிஞ்சுகளுக்கும் நிதி தேவைதான்.

'அவர்களின் எதிர்கால வாழ்வுக்காக நிதி சேகரிப்பவர்களே! இப்போது அவர்கள் பசியாய் இருக்கிறார்கள். ஒருபிடி சோறு கொடுங்களேன். நாளைய தினத்துக்காக இன்று இருப்பவைகளைத் தொலைத்துவிடாதீர்கள்!' என்ற ஓங்கிய கத்தலால் அவர்களை அறையவேண்டும்போல எழுந்த உணர்வுகளை இயலாமையுடன் அடக்கிக்கொண் டேன்.


 
(பிரசுரம்: மண், 1995)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!