வியாழன், 2 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 8

சாருவின் முகத்தில் பூரிப்புப் பொங்கி வழிந்தது. அடிக்கடி தோளில் அலையாகப் புரண்ட கூந்தலை வலக்கரத்தால் ஒதுக்கியவாறு, எனக்கெதிரே அமர்ந்தவாறு என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறாய் சாரு..?"

"ம்.. இன்றைக்காலும் இப்பிடி வர ஒரு 'சான்ஸ்' கிடைச்சுதே.. அதுதான்.."

அர்த்தமாகப் பார்த்தாள்.

"என்ன சாரு.. கேலியா.. இவ்வளவுநாளும் ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போகேலை என்ற வருத்தமா? சொறி.."

"ஒவ்வொரு 'போய்ஸ்' ஒரு 'கேளோட' வெளிய போறதெண்டா சந்தோசப்படுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இங்க தலைகீழா இருக்க.. மாமி சொல்லித்தானே வந்தீங்க..?!"

சிட்டுக்கள் இரண்டு சிறகடித்தாற்போல விழிமடல்கள் படபடக்க, அவள் கூறியவற்றில் ஏதோ அர்த்தம் புதைந்திருப்பதாகத் தென்பட்டது.

'சிலவேளை அன்று அம்மா சொன்னமாதிரி... என் வாழ்வில் இணையும் எண்ணம் இவளின் உள்ளத்திலும் உள்ளதோ?!'

'அவ்வாறு ஒரு எண்ணக்கிளர்வுடன்தான் இலண்டனிலிருந்து வந்தாளா?'

மனக்கு கஸ்டமாக இருந்தது.

'என் மனம் பிருந்தாவிடம் பறிபோனதை இவளுக்கு எவ்வாறு கூறுவது.. முகம் தெரியாத ஒருத்திக்காக என் நேரத்தை கொம்பியூட்டருடன் கரைப்பதை... என் ஏனைய உணர்வுகளைக் கரைத்து காதல் உணர்வில் மூழ்கித் தத்தளிப்பதை இவளிடம் சொன்னால்.. சாருவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?!'

மனதிலே பிறந்த எண்ணக் குவியல்களால் என் சிந்திக்கும் அறிவு, வானத்திலே பிரகாசித்த ஒளி குறைவதைப்போல மங்கிக் கொண்டிருந்தது.

பறவைகள் சில எதையோ தொலைத்துவிட்டாற்போல அலறியவாறு எங்கோ விரைந்துகொண்டிருந்தன.. என் மனதைப்போல.. ஆம்.. சாரு வந்ததிலிருந்தே பிருந்தாவைக் காணாது என் மனம் இருளில் ஒரு ஒளித்துகளாவது கிடைத்து பிருந்தாவை அடையாளங்காட்டாதா என்ற விரைதலில்தானே?!

அது ஒரு ஆற்றங்கரை.

பெரியோர்களும் சிறியோர்களும் காதல் ஜோடிகளுமாக ஒரே கலகலப்பு.

சைக்கிள் ஓடி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருபுறம். உதைபந்தாட்டம் என்ற போர்வையில் புற்களுள் பந்தை உருட்டி விளையாடும் சிறுவர்கள் ஒருபுறம். சூழல் மறந்து இதழோடு இதழ் சேர்த்து உரசலில் உல்லாசம் காண்போர் ஒருபுறம். மேனி தளர்ந்தாலும், தோல் சுருங்கினாலும், வாழ்வு முடியும் தருணத்திலிருந்தாலும் அருகருகே அமர்ந்து, கனிவாகக் கதைகள் பேசித் தோளில்தட்டி வாய்விட்டுச் சிரிக்கும் முதிய தம்பதிகள் ஒருபுறம்.

இவர்களிடையே அந்த அந்திசாயும் நேரத்தில் ஆற்றங்கரையோரத்திலே 'சில்'லென்ற இதமான காற்று உடல்வருட நானும் சாருவும்..!!

"சாரு...!"

"ம்.."

"காதலைப்பற்றி என்ன நினைக்கிறாய்.."

அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை முகம் துல்லியமாகக் காட்டியது.

ஒரு கணம் தயக்கம்.. மறுகணம் பிரகாசம்.

அரும்பு இதழ்களின் இடையே மெல்லிய முத்துப்பல் ஒளிக்கீற்று.

"பரவாயில்லையே.. காதலைப்பற்றியும் கேட்க தோன்றுதே?"

சலனமில்லாமல் ஓடும் நதியைப் பார்த்தவாறு கூறினாள்.

"இல்லை சாரு.. ஒரு பெண் காதலைப்பற்றி என்ன நினைக்கிறாள் என்று அறியவேண்டாமா?"

"இதில என்ன ஆண் பெண்.. ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரி நினைப்பினம்.. நான் நினைக்கிறன்.. வாழ்க்கையிலை அதுவும் ஒரு 'இன்ரறஸ்டிங்'கான 'சப்ரர்'..."

"சுவையான அத்தியாயம்.. அது எப்பிடி ஆரம்பிக்கும்.."

'கொல்'லெனச் சிரித்தாள்.

"என்னடா.. ஆராய்ச்சியா.. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சா ஆரம்பிக்கும்.."

"ஒருத்தரை ரண்டுபேருக்கு பிடிக்காதா என்ன.. இல்லை ரண்டுபேரை மூன்று பேருக்கு பிடிக்காதா என்ன..? அது காதல் இல்லையா..?"

"அட கடவுளே.. ஏன்தான் உன்ரை புத்தி இப்பிடிப் போகுதோ..? 'சற்'றிலை இருந்து சரியாதான் கெட்டுப்போனாய்.."

முகத்தைச் சுழித்துக்கொண்டாள்.

தொடர்ந்தாள்.

"காதல் என்றால் ஒருத்திக்கு ஒருத்தன்.. அதுதான் காதல்.. அதுக்குமேலை எல்லைதாண்டினால் காமம்.."

"அதைவிடு.. காதல் உருவாகுறதுக்கு என்ன காரணம்..?"

"அழகு.. கவர்ச்சி.. இதுக்கும்மேலை மனம்.. இப்பிடிக் கனக்க இருக்கே.."

"ஏன்.. சந்தர்ப்பங்கள்.. சூழ்நிலைகள் காரணமில்லையா?"

"எப்பிடி.."

"சின்னப்பிள்ளைகளா இருக்கேக்கை தாய் தகப்பன் 'இவன் இவளுக்குத்தான்' எண்டு சொல்லுறது..?"

"ம்.."

"ஆனால் இதை காதல் எண்டு சொல்லேலாது சாரு.. இது ஒரு மனோவசியம்.."

அவள் கண்களை ஊடுருவினேன்.

"அப்படி எண்டா..?"

"கிட்டத்தட்ட மூளைச்சலவைமாதிரி.. இயல்பாக வாற காதல் வேறை.. இப்பிடி மூளைச்சலவையாலை வாறது வேறை..."

அவள் கண்களில் சிறு சலனம் தோன்றி மறைந்தது.

அவளுக்கு ஓரளவாவது என்னைப்பற்றிப் புரியவைக்க வேண்டும். அம்மா நினைப்பதுபோல அவளும் என்னை தன் வாழ்க்கைத் துணையாக எண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் பேச ஆரம்பித்தேன்.

"சில தாய் தகப்பன் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலேயே வாழ்க்கையை தீர்மானிச்சுவிடுகினம். அதை சாடைமாடையாக சொல்லியும் காட்டுவினம்.. சில பிள்ளைகளின்ரை மனசிலை பதிஞ்சுடும்.. ஆனால் இது பலசமயங்களிலை ஏமாற்றத்திலைதான் முடிஞ்சிருக்கு.. இல்லையா?"

காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியவாறு என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ என்னமாதிரி..?"

"அப்படியெண்டால்..?"

"நீ யாரையாவது காதலிக்கிறியா..?"

நேரடியாகவே கேட்டாள்.

'சொல்லலாமா.. என் 'சற்' நாயகியைப்பற்றி..?! என்னில் அன்பால் உருகும் அந்த ஐஸ்கிறீம் சிலையைப்பற்றி..'

எதுவோ தடுத்தது. கூறுவதால் ஏற்படும் விளைவுகளுக்குத் தயாராகாத நிலைப்பாடாக இருக்கலாம்.

"நீ நினைக்கிறமாதிரி இல்லை சாரு..."

குற்ற உணர்வுடன் அவளைப் பார்க்காமல் கூறினேன்.

'சற்'றிலைதான் பொய் கூறுவார்களாம்.. நான் 'சற்'றுக்காக அவளிடம் பொய் சொன்னேன்.

"நீ சுத்த மோசம்டா அத்தான்.. ஒரு ஐஸ்கிறீம் வாங்கித் தரக்கூடாதா?"

சற்றுத் தொலைவில் இருந்த ஐஸ்கிறீம் கடையைச் சுட்டிக் காட்டினாள்.

"சரி.. வாங்கினால் போச்சு.."

"ஒரேயொரு ஐஸ்கிறீம்.."

"ம்..."

"நீ பாதி.. நான் பாதி.."

குதூகலத்துடன் கூறினாள்.

"நோ..."

'என்னில் பாதி என் ஐஸ்கிறீம் சிலையல்லவா?'

சொல்லத் துடித்தேன். மெல்ல விழுங்கினேன்.

"என்ன நோ..?"

"எனக்கு ஐஸ்கிறீம் பிடிக்காது.. நீயே சாப்பிடு.."

பிருந்தா கைகொட்டி ஏளனமாகச் சிரிப்பதுபோலிருந்தது... என் மனதுக்குள்தான்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!