புதன், 15 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 19

ணனித்திரையையே சில வினாடிகள் பார்த்தவள் என்னை நோக்கித் திரும்பினாள். அவளது முகத்தில் நான் எதிர்பார்த்த அதிர்ச்சியோ கவலையோ எதையுமே காண முடியவில்லை. மாறாக ஆச்சரியத்தால் கண்கள் கருவண்டுகளாக உருள நின்றாள்.

"அத்தான்.. இந்தப் போட்டோ எப்பிடி உங்களுக்கு வந்திச்சு..?"

உணர்ச்சிகளுக்குத் திரையிட்டு எப்படி இயல்பாய் இப்படிக் கேட்க முடிந்தது?! நிதானமாய் எவ்வாறு வினா வந்து விழுந்தது?! தான் வசமாய் வலையில் விழுந்ததை உணர்ந்தும் உணராதவள்மாதிரி இயல்பாயிருக்க இவளால் எவ்வாறு முடிந்தது?! அவளவு உறுதியானவளா?! அவள் கண்களை ஊடுருவி வெறித்துப் பார்த்தேன்.

'தெரியாமல் கேட்கிறாளா அல்லது போட்டோ அனுப்பியவர்களில் எவனிடமிருந்து இந்தப் போட்டோ எனக்குக் கிடைத்தது என அறியக் கேட்கிறாளா?'

வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"எப்பிடி வந்திருக்கும் எண்டு உனக்குத் தெரியாதா?"

கண்களில் அப்போது சிறு கலக்கம் தோன்றி மறைந்தது. என்னை ஒருகணம் உற்று நோக்கியவள் அமைதியாகப் புன்னகைத்தாள்.

"தெரியும் அத்தான்.. 'சற்'மூலமா வந்திச்சா இல்லாட்டி அப்பா அம்மாமூலமா வந்திச்சா எண்டு அறியத்தான் கேட்டனான்.. "

"ஓ.. 'சற்'றிலை வந்ததெண்டால் ஆர் தந்ததெண்டு தெரியுமா?"

"ம்.. தெரியும்.."

"எப்பிடி.."

எரிச்சலுடன் கேட்டேன்.

"ஒருத்தனுக்குத்தானே போட்டோ கொடுத்தேன்.. அதாலை தெரியும்.. அவன்தான் உனக்கு அனுப்பியிருப்பான்.. இல்லையா?"

"என்னவோ.. படம் அனுப்புற அளவுக்கு அவனோட பழக்கமா?" என்று ஏளனமாகக் கேட்டேன்.

உள்ளே கோபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

"யுனிவர்சிற்றி 'கொஸ்ரல்'ல 'சற்'பண்ணுவாங்க.. ஒருநாள் உமாட அறைக்கு போயிருந்தேன்.."

"ம்..."

"அப்ப அவள் 'சற்'பண்ணிக்கொண்டிருந்தாள்.. அவன் பேர்கூட லவ்லிபோய் என்று நினைக்கிறன்.. ஓ.. அவன்தான்.. அப்ப அவள் என்னையும் அவன்கூட 'சற்'பண்ண சொன்னாள்.. அண்டைக்குதான் முதன்முதலா 'சற்'பண்ணினேன் அத்தான்.. அப்ப அவன் என்ரை போட்டோ கேட்டான்.. இவள் உமாதான் தன்ரை கொம்பியூட்டரில இருந்த என்ரை போட்டோவை அனுப்பினாள்.."

"ம்.. அவன் படம் கேட்டானாம்.. அனுப்பினாவாம்.. அவன் எப்பிடிப்பட்ட ஆள்.. எண்டு தெரியாமை எப்பிடி படம் அனுப்பினாய்..? நம்ப சொல்லுறியா?"

சற்று கோபமாகக் கேட்டேன்.

"அத்தான்! நான் ஏன் பொய் சொல்லவேணும்? அண்டைக்குத்தான் முதன்முதலா 'சற்'பண்ணினன்.. அதுவும் ஜானு கூப்பிட்டு.. அதுதான் கடைசியும்.. நானும் யோசியாமை ஜானுவை படம் அனுப்ப விட்டுட்டன்.. பிறகுதான் அவசரப்பட்டு படம் அனுப்பினதுக்கு 'பீல்'பண்ணினேன்.. அதுக்கு பிறகு 'சற்'பற்றி பலவிசயங்களை 'பிரண்ட்ஸ்'மூலம் அறிஞ்சன்.. 'சற்'றால எவளவோ நல்ல விசயங்களை செய்யலாம்தான்.. ஆனா எங்கடை ஆக்களிலை கனபேர் 'சற்'றை கெட்ட வழீலதான் பாவிக்கினம் எண்டு புரிஞ்சுது.. என்ரை 'பிரண்ட்ஸ்' கதை கதையா சொல்லுவாங்க.. உதாரணமா சிங்களாக்களின்ரை 'சற்'ல போய் தமிழ். தமிழீழம் எண்டு பேசி அவங்களோடை சண்டை பிடிப்பாங்களாம்.. தமிழ் 'சற்'களிலை கெட்ட வார்த்தையால பச்சை பச்சையா பேசி 'கேள்சை' சண்டைக்கிழுப்பாங்களாம்.. இப்பிடி பல கேள்விப்பட்டன்... அதாலை அந்தப் பக்கம் போகாமையே விட்டுட்டன்.. ஆனா அந்தப் படம் எப்பிடி இங்க..?" என்று கேட்டாள் சாரு.

"எப்படி வந்ததா?"

கேலியாகக் கேட்டேன்.
அவனைப்பற்றி .. அவன் சொன்ன விசயங்களைப்பற்றி.. அதற்கு அத்தாட்சியாக அவன் அனுப்பிய அந்தப் படத்தைப்பற்றிக் கூறியபோது..

"போதும்.. போதும்.." என்று விம்மியவாறு அங்கிருந்து ஓடினாள் சாரு.

"சாரு.. சாரு.."

அழைப்பிற்குத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள்.

'அந்த விம்மலின் அர்த்தம் என்ன?!'

உண்மை தெரிந்துவிட்டதே என்ற அதிர்ச்சியா அல்லது அபாண்டமாகப் பழி வந்து சேர்ந்துவிட்டதே என்ற அங்கலாய்ப்பா?

என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

திக்குத் தெரியாத காட்டிலே திசையறிய யாராவது உதவமாட்டார்களா என்ற ஆதங்கத்துடன் நிலைகுலைந்தவனாய் மனதுள் தத்தளித்தேன்.

அந்த லவ்லிபோயிடமே மறுபடிக் கேட்கலாமா? கேட்டாலும் என் குழப்பம் தீர விடை கிடைக்குமா?

ஆண்டாண்டுகாலமாய் அத்தான் அத்தானென என்னுடன் பழகும் சாருவை நம்புவதா? ஒரு சில நாட்களாக அல்லது வாரங்களாக என்னுடன் 'அண்ணா அண்ணா'வெனப் பழகும் லவ்லிபோயை நம்புவதா?

துடுப்பிழந்த படகாய் தவித்தேன். நிச்சயமாக எனக்குக் கரை காட்ட ஒரு கலங்கரை விளக்கம் தேவை. அது யார் உருவில் வரும்?!

மனதில் சிறு உறுத்தல்.

அன்று சுஜி ஒரு படம் அனுப்பியபோது ஏற்றுக்கொண்ட நான்.. தற்போது சாரு யாருக்கோ ஒரு படம் அனுப்பியதைத் தாங்க முடியாதவனாய்விட்டேனா? அல்லது சாருதான் லவ்லிபோய் சொன்ன 'உமா' என்ற சஞ்சலமா?

யோசனையுடன் கணனித் திரையை நோக்கினேன்.

சுஜி மெசன்சரில் அழைப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

அவளுடன் உரையாடத் தயக்கமாக இருந்தது.

உரையாடினால் நிச்சயமாகச் சாருவைப்பற்றிக் கேட்பாள்.

'என்ன சொல்வது..?'

எனினும் அந்த சின்னஞ்சிறிய பாச உள்ளத்துடன் உரையாடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கணனியை நெருங்கினேன்.

சாருவின் படம் திரையைவிட்டு அகல, சுஜியின் மெசன்சர் யன்னல் கணனித்திரையில் பெட்டியாக விரிந்தது.

"ஹலோ சுஜிக்குட்டி.. சுகமா?"

"சுகம்டா அண்ணாக்குட்டி.. என்ன செய்தாய்.. எவளவுநேரமா உன்ரை பதிலுக்கு 'வெயிட்'பண்ணுறேன் தெரியுமா?"

உரிமையுடன் கடிந்துகொண்டாள்.

"அண்ணி சுகமா?"

"அண்ணியா..?"

"லொள்.. சாரு அண்ணி.."

"ம்.."

"என்ன ம்.. அவங்களை 'லவ்'பண்றேன்னு சொல்லிட்டியா?"

"நோ.."

"ஐயோ.. மொக்கு.. மொக்கு.. என்ன 'டிலே'? கெதியா சொல்லுடா அண்ணா.. என்னால 'டிலே'பண்ணேலாது.."

"ஏன்..?"

"திங்கள் கிழமை ஒரு இடத்துக்கு போறன்டா.. பெரிய 'றிப்'..."

"ஓ.. எப்போ திரும்பி வருவாய்..?"

"தெரியாதுடா.. சிலவேளை வரமாட்டேன்.."

"என்ன...?"

"ம்.. போற இடத்தில பிடிச்சுக்கொண்டா அங்கயே 'செற்றில்' ஆயிடுவேன் அண்ணா.. அதுக்கிடைல உன்னோடயும் சாரு அண்ணியோடயும் பேசணும்டா.. ப்ளீஸ்டா.. நீ என்ன அண்ணா.. இன்னும் 'லவ் யூ' சொல்லாம இருக்காய்.. அதைக் கேட்கத்தானே ஆசையோட இப்ப வந்தேன்.."

"அது சரி.. இப்ப எங்க போறாய்.. எதுக்கு 'செற்றில்' ஆகப் போறாய் சொல்லு.."

"ம்.. உனக்கு சொல்லாம போகமாட்டேன் அண்ணா.. இன்னிக்கு என்ன கிழமை.. வெள்ளிதானே.. சன்டே... ஞாயிற்றுக் கிழமை 'சேர்ச்'சுக்கு போவிட்டு வந்து கட்டாயம் சொல்லுவன்.. இன்னொண்ணு..!"

"என்ன..?"

"அதுக்கிடைல சாரு அண்ணிக்கு 'லவ் யூ' சொல்லி.. அவங்களையும் மெசன்சருக்கு கூட்டிக்கொண்டு வரணும்.. உங்க ரண்டு பேரோடையும் 'சண்டே' 'மைக்'ல பேசுவேன்.."

"றியலி..?!"

வியப்பாக இருந்தது.

"ஷ்யர்.. நிச்சயமா அண்ணா.. உன்னோடை 'மைக்'ல பேசணும்.. என் அண்ணா குரலை கேட்டுட்டு.. 'றிப்' சந்தோசமா போகணும்.. இதுதான் இந்த தங்கச்சிக்குட்டின்ர ஆசை.. நிறைவேத்துவியா?"

"இப்ப பேசேன்டா.."

ஆர்வத்துடன் கேட்டேன்.

"நோ.. சாரு அண்ணியும் இருக்கணும்.. அவங்களிட்ட நான் ஒண்ணே ஒண்ணு கேட்கணும்.."

"என்ன..?"

"ஐயோ அண்ணா.. 'சண்டே'மட்டும் பொறுடா.. இன்னொரு 'சர்ப்ரைஸ்'.. லொள்.."

"என்ன..?!"

"ஞாயிற்றுக்கிழமை பிருந்தாவும் உன்னோட 'மைக்'ல பேசுவாள்.."

இப்பொழுது எனக்கு நிசமாகவே தலைசுற்றியது.

"என்ன விளையாடுறியா..?"

நம்பமுடியாமல் கேட்டேன்.

"இல்லை அண்ணா.. உண்மைதான்.. பிருந்தாக்கு ஒரு பாட்டு பாடிக் காட்டினாயாமே.. "

"ம்.. என்ன பாட்டு...?"

"மறந்துட்டியா.. லொள்.."

"யா... 'ஐஸ்கிறீம் சிலையே நீதானா..' ரண்டு வரி பாடினேன்.. ஒருநாள் முழுக்கப் பாடணும் எண்டு சொன்னாள்.. அதுக்குப் பிறகுதான் காணலையே?"

"லொள்.. அந்த பாட்டை முழுக்க 'பிறிபெயர்'பண்ணி வைக்கச் சொன்னாள்.. ஞாயிற்றுக் கிழமை பாடணும்.. சொல்லிட்டேன்.. அப்போதான் நீ அச்சா அண்ணா.. ஓகே?"

"எனக்கு ஒண்ணுமா புரியலைடா.."

"சண்டே' எல்லாம் புரியும் அண்ணா.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. போவிட்டு 'சண்டே' வாறேன்.. சரியா..?"

"ம்.. "

"ஐயோ அண்ணா ஒரு விசயம் மறந்துட்டேனே.."

"என்னடா..."

"அந்த லவ்லிபோய் ஒரே கரைச்சல்டா.. உனக்கு ஏதோ படம் அனுப்பினானாம்.. அதபற்றிப் பேச உன்னை மெசன்சர்ல கூப்பிட்டானாம்.. நீ 'ஒன்லைன்'ல இருந்துகொண்டு பதில் சொல்லலையாம்.. உனக்கு 'ஓவ்லைன் மெசேஜ்' போட்டானாம்.. பாத்தியா?"

அப்போது அவற்றைக் கவனிக்கும் நிலையிலா நான் இருந்தேன்?!

"ஓகேடா.. நான் பாக்கிறேன்.."

"சீயூ அண்ணாக்குட்டி.."

அவள் சென்றதும் லவ்லிபோயின் அனுப்பிய 'ஓவ்லைன் மெசேஜ்'ஜை திறந்தேன்.

"சொறி அண்ணா.. அவசரத்தில் உமாட படம் என்று அவள் பிரண்ட் ஒருத்தியின் படத்தை அனுப்பிட்டேன்.. அடுத்தமுறை சந்திக்கும்போது உமாட படம் தாறேன்.. சொறிடா.."

ஓ... அவசரப்பட்டு விசயத்தைப்போட்டுடைத்து சாருவின் மனதைப் புண்ணாக்கிவிட்டேனே?!

குற்ற உணர்வுடன் அவசரமாக அவளது அறைக்கு விரைந்தேன்.

அங்கே என் சாரு... பொலிவிழந்த ஓவியமாய் தலையணையுள் முகம்புதைத்து விம்மிக் கொண்டிருந்தாள்.

அந்தக் காட்சியில் என்னை மறந்து அவள் அருகே சென்றேன்.

சூழல் மறந்தது. கூச்சம் தகர்ந்தது. தயக்கம் ஒழிந்தது. தடுமாற்றம் அழிந்தது. என்னையே இழந்தேன்.

கொழுகொம்பற்ற கொடியாய் வதங்கிப் போயிருந்தவளை வாரியணைத்துக்கொண்டு..

"சாரு.. என்னை மன்னிச்சுடடா.. ஐ லவ் யூ சாரு.. ஐ லவ் யூ.." என்று கண்கள் கலங்கப் பிதற்றினேன்.

(அடுத்த அங்கத்தில் நிறையும்..!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!